Enable Javscript for better performance
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    By dn  |   Published on : 23rd March 2014 11:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    canvas1

    பாஜக தலைமையிலான கூட்டணி மூலம் தமிழகத்தில் மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்படும் என, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு ஆரல்வாய்மொழியில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், தோவாளையில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அதிமுக, திமுக தலைமையில்லாமல் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பிற 41 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணி தமிழகத்தில் முதல்நிலை கூட்டணி ஆகும்.

    இந்தக் கூட்டணி மூலம் தமிழகத்தில் மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்படும். கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ, ஈஸ்வரன், பச்சமுத்து ஆகியோர் முழுவீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    மீனவர் பிரச்னை: தமிழகத்தில் மீனவர் பிரச்னையை தீர்க்க ஒரே வழி நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும். அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற அடுத்த நிமிடமே இலங்கை தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்.

    அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். பாஜக தனி மெஜாரிட்டியுடன் 275 இடங்களைக் கைப்பற்றும். பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணிக் கட்சிகளை நாங்கள் கௌரவிப்போம்.

    கோவை பாஜக வேட்பாளர் மாற்றப்பட வேண்டும் என்ற பிரச்னை தொடர்பாக கருத்துச் சொல்ல முடியாது. அது உள்கட்சி விவகாரம்.

    காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இலங்கையில் 2 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தடுக்கத் தவறிய காங்கிரஸூக்கு இது தண்டனைக் காலம். தண்டனை இந்தத் தேர்தலில் நிறைவேற்றப்படும்.

    தேர்தலில் போட்டியிடாமல் ப. சிதம்பரம் விலகி இருப்பதைவிட அரசியலில் இருந்து அவர் விலகுவது நல்லது.

    கூடங்குளம் விவகாரம்: கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அந்தப் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை மற்றும் கல்லூரிகள், தொழிற்பேட்டைகள் உருவாக்க வேண்டும். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க உரிமம் வழங்க வேண்டும். கூடங்குளம் பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை.

    குமரி மாவட்டத்தில் குளச்சல் துறைமுகம், விமான நிலையம், சாலை மேம்பாட்டு வசதிகள் செய்யப்படும் என்றார் அவர்.

    பிரசாரம் தொடக்கம்: தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது தேர்தல் பிரசாரத்தை தோவாளையில் தொடங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai