சுடச்சுட

    

    நில மோசடிப் புகாரில் ப.சிதம்பரம் ஆதரவாளர் தினகரன் கைது

    By dn  |   Published on : 23rd March 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dinakaran

    சென்னை திருமுல்லைவாயிலில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்ததாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் வி.எஸ்.ஜெ. தினகரன் (36) கைது செய்யப்பட்டார்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருமுல்லைவாயில் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (52). இவர் உடல் பருமனைக் குறைக்கும் டானிக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். பழனிச்சாமி கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நெருக்கமானவரான பெரம்பூரைச் சேர்ந்த தினகரனிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கினார். இதற்காக பழனிச்சாமி திருமுல்லைவாயிலில் தனக்குச் சொந்தமாக இருக்கும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நிலத்தின் பவர் பத்திரத்தைக் கொடுத்துள்ளார்.

    மேலும், மாதம்தோறும் அந்த கடனை ரூ. 5 லட்சம் தவணையாக செலுத்துவதாக பழனிச்சாமி, தினகரனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்நிலையில் அந்த கடனை முழுமையாக செலுத்திய பழனிச்சாமி, அண்மையில் தினகரனிடம் அந்த பவர் பத்திரத்தை திருப்பிக் கேட்டார். ஆனால் தினகரன், அந்த பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல், அவரை மிரட்டியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த வாரம் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் திருமுல்லைவாயிலில் உள்ள அந்த நிலத்தை ஆக்கிரமித்து சுவர் எழுப்பியுள்ளார். இதற்கு பழனிச்சாமி, அவரிடம் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதும் தினகரன் அவரை மிரட்டி விரட்டியடித்துள்ளார்.

    இது குறித்து பழனிச்சாமி, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், தினகரன் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது நில அபகரிப்பு, கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

    தினகரன் கைது: இதில் தினகரனின் ஆதரவாளர்களான பெரம்பூரைச் சேர்ந்த அப்பாஸ் (26), ராஜதுரை (48), கே.சரவணன் (24), ஆர்.சரவணன் (26) உள்ளிட்ட 8 பேரை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். அதேநேரத்தில் போலீஸ் தேடுவதை அறிந்த தினகரன் தலைமறைவாகவே இருந்தார். மேலும் அவர், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் திருமுல்லைவாயில் போலீஸார், தலைமறைவாக இருந்த தினகரனை பெரம்பூரில் சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தினகரன், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட தினகரன், வட சென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.எஸ். பாபுவின் அண்ணன் மகன் ஆவார். மார்ச் 15-ஆம் தேதி தியாகராய நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ப. சிதம்பரத்துடன் மேடையில் அவர் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆதரவாளரும் கைது: பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரிடம் ரூ. 5.50 லட்சம் மோசடி செய்ததாக காங்கிரஸ் சேவாதளம் மற்றும் மகளிரணி நிர்வாகியான கல்பனாவை சென்னை திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். இவரும் ப. சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai