சுடச்சுட

  

  மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை கொடுங்கள்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

  By dn  |   Published on : 23rd March 2014 10:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழர்களின் நலன் காக்க, மத்திய அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அதிமுகவுக்கு மக்கள் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

  கடலூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரசாரத்தை முடித்த ஜெயலலிதா, விழுப்புரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணியளவில் வந்தார். ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து அவர் பேசியதாவது:

  கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கையால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இந்திய நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அதனால் சர்வாதிகார காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டியது நமது கடமை.

  நாட்டில் விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, தொழில் வளர்ச்சியின்மை, மாதாமாதம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண்மை வளர்ச்சியின்மை ஆகியவற்றுக்கு மத்திய காங்கிரஸ் அரசுதான் காரணம். மேலும், ஊழல்களும் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. இக்கூட்டணியில் சில மாதங்களுக்கு முன்பு வரை அங்கம் வகித்த திமுக, 2-ஜி ஊழலை முன்னின்று நடத்தியது.

   

  மின் தட்டுப்பாட்டுக்கு திமுக காரணம்: தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டுக்கு திமுகவே காரணம். தொழில் வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரம் மின் உற்பத்தி. ஆனால், தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

  அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 2,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கும், 5,500 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்வதற்கான புதிய திட்டங்களையும் உருவாக்கியுள்ளோம்.

   

  தமிழர்களுக்கு துரோகம்: மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் விளைவித்தது. இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கைக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும் அளித்தது. அதற்கு திமுகவும் கூட்டணியில் இருந்து கொண்டு உடந்தையாக இருந்தது.

  இந்த நிகழ்வுகளுக்காக அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். இலங்கைக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், மத்திய அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுகவும் நடவடிக்கைக்கு வலியுறுத்தவில்லை.

  கச்சத்தீவு விவகாரத்திலும், தமிழர்களுக்கு எதிராக, அது இந்தியாவுக்கே சொந்தமானது இல்லை என்றுதான் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. 17 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்துக்கு செய்தது என்ன?

  நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படும். இலங்கை போரில் தவறிழைத்தவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் தண்டனை பெற்றுத்தரவும், தமிழை ஆட்சி மொழியாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றவும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

  எனவே, தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட, மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானம் செய்யும் அதிகாரத்தை அதிமுகவுக்கு மக்கள் வழங்க வேண்டும். மத்தியில் வலிமையற்ற காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்றிவிட்டு வல்லரசை அமைக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த ஆதரவை விடவும் அதிக ஆதரவளித்து மத்தியில் நல்லாட்சி அமைய அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றார் ஜெயலலிதா.

  கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன், தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்டச் செயலர் ஆர்.லட்சுமணன், முன்னாள் எம்.பி. சரோஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai