சுடச்சுட

  

  3 ஆண்டுகள் ஆகியும் மின்வெட்டு தீரவில்லை: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

  By dn  |   Published on : 23rd March 2014 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin_canvas1

  தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து ஸ்டாலின் பேசினார்.

  அதைத் தொடர்ந்து, கும்பகோணம் காந்தி பூங்காவில் அவர் மேலும் பேசியது:

  கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல. அது ஒரு காட்சி. அதுவும் காணொலிக் காட்சி.

  கடந்த திமுக ஆட்சியில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. நெசவாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மின்வெட்டு முறைப்படுத்தப்பட்டு அறிவிப்பாக வெளியிடப்பட்டது. ஆனால் மக்கள் 2 மணி நேர மின்வெட்டுக்கே ஆட்சியை மாற்றினர். தற்போது 10 முதல் 18 மணிநேரம் வரை மின்வெட்டு உள்ளது. மின்வெட்டு பிரச்னைக்கு 3 மாதங்களில் தீர்வு காண்பேன் எனக் கூறினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் தீர்வு காணப்படவில்லை.

  தமிழகத்தில் ஆட்சிபுரியும் ஜெயலலிதா மூன்று ஆண்டுகளில் ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாரா அல்லது சாதனைகளைத்தான் படைத்தாரா என்று சொல்ல முடியுமா?

  தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சி புரிந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

  மாநிலத்தில் ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு நல்ல பாடம் புகட்டவும், மத்தியில் கருணாநிதி கைகாட்டும் ஒருவர் பிரதமராக அமரவும் வாக்காளர்கள் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். பாபநாசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கல்யாணசுந்தரம், கோவி. அய்யராசு, கும்பகோணம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாக்கோட்டை க. அன்பழகன், ஜவாஹிருல்லா, திமுக நகரப் பொறுப்பாளர் தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai