சுடச்சுட

  
  vaiko_alagiri

  திமுக தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க.அழகிரியை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ மக்களவைத் தேர்தலில் ஆதரவு கேட்டார்.

  மதுரை சத்யசாய் நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சந்திப்பு நடந்தது.

  திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியிடம் பல்வேறு கட்சியினரும் ஆதரவு கோரி வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுதில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை அழகிரி சந்தித்தார்.

  அண்மையில், மதுரை விமான நிலையத்தில் வைகோ-அழகிரி இருவரும் சந்தித்துப் பேசினர். இதைத்தொடர்ந்து வைகோ, அழகிரியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

  இதன்படி, அழகிரியின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9.20-க்கு வைகோ வந்தார். அழகிரிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அழகிரி-வைகோ இருவர் மட்டும் ஆலோசனை நடத்தினர். ஏறத்தாழ 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

  அதன் பிறகு, வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்துள்ளது. அண்மையில் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் சென்றோம். அப்போது இருவரும் பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு பேசினோம். வீட்டுக்கு வாருங்கள் என்று அழகிரி என்னை அழைத்தார்.

  அதன்படி இன்று (மார்ச் 23) அவரைச் சந்தித்து பேசினேன். 1993 இல் கடைசியாக நான் அவரை வீட்டில் சந்தித்ததை நினைவு கூர்ந்த அவர், இந்த சந்திப்பு மிகுந்த நெகிழ்வைச் தந்துள்ளது அழகிரி குறிப்பிட்டார்.

  நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு ஆதரவு தருமாறு கோரினேன். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நான் உள்பட மதிமுகவின் ஏழு வேட்பாளர்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு வாழ்த்துத் தெரிவித்து, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார் வைகோ.

  ஆதரவு அளிப்பதாக அழகிரி கூறினாரா எனக் கேட்டதற்கு, நல்லபடியாக நடக்கும் என்றால் அதற்கு அப்படித்தானே அர்த்தம் என்று வைகோ பதில் அளித்தார்.

  சற்றுநேரம் கழித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட அழகிரியிடம், வைகோ ஆதரவு கோரியுள்ளது குறித்து கேட்டதற்கு, எனது ஆதரவாளர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்று பதில் அளித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai