Enable Javscript for better performance
என்எல்சி பங்குகள் தனியார் வசம் போகாமல் தடுக்கப்பட்டது: ஜெயலலிதா பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    என்எல்சி பங்குகள் தனியார் வசம் போகாமல் தடுக்கப்பட்டது: ஜெயலலிதா பேச்சு

    By dn  |   Published on : 24th March 2014 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya_canvas2

    என்எல்சி பங்குகள் தனியார் வசம் போகாமல் தடுத்து நிறுத்தி தொழிலாளர்களின் நலனை தமிழக அரசு காத்தது என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

    கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழித்தேவனை ஆதரித்து அவர் பேசியதாவது:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள பீங்கான் தொழில்நுட்பப் பயிற்சி மையம் ரூ.85 லட்சம் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 4 பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, ஒரு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மூன்று பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    கடலூர் நகரில் அமைக்கப்பட்டு வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக 1.8 கி.மீ. நீளமுள்ள ஜவான்பவன்-கம்மியம்பேட்டை சாலை ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் அகலப்படுத்தப்பட்டது.

    புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சிகள் மற்றும் 812 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறும் வகையில், கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ரூ.260 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

     

    ரூ.14 கோடியில் மீன் பதனிடும் பூங்கா: பெரிய கங்கணாங்குப்பம் கிராமத்தில் 1.94 ஏக்கர் பரப்பளவில் ரூ.14 கோடி செலவில் மீன் பதனிடும் பூங்கா அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முடசலோடையில் உள்ள மீன் இறங்கு தளத்தை ரூ.7 கோடியே 78 லட்சம் செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இதுபோல், சாமியார்பேட்டையில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேக்கு மரங்கள் வளர்க்கும் திட்டத்துக்கும், ஏற்கெனவே பயிரிடப்பட்டுள்ள தேக்குமரத் தோட்டங்களை பராமரிப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

     

    ரூ.900 கோடியில் தானே வீடுகள்: தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.900 கோடி செலவில் 90,000 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திட்டக்குடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகள் கட்ட ரூ.4 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    நெய்வேலி அரிசி ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் வள, நில வளத் திட்டத்தின் கீழ் நல்லூர் மற்றும் மங்களூர் ஒன்றியங்களில் உள்ள 101 ஏரிகள், ரூ.39 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளன.

    கூத்தப்பாக்கம் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    என்எல்சி பங்குகள் மீட்பு:

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய முற்பட்டது. பெரும் முயற்சியின் விளைவாக அவற்றை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களே வாங்கியது. இதன் மூலம் என்எல்சி பங்குகள் தனியாருக்கு தாரைவார்ப்பது தடுத்து நிறுத்தப்பட்டது. தொழிலாளர்களின் நலன் காக்கப்பட்டது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai