சுடச்சுட

    
    stalin_thirumalavan

    திமுக ஆட்சியில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் ஏராளமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    சிதம்பரம் மேலரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை, திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து, திமுக பொருளர் மு.க.ஸ்டாலின் பேசியது:

    திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். அவரது ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, சிறுபான்மை சமுதாய மக்களுக்கு ஏராளமான சாதனைத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

    2006-11 ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில், நாட்டில் எந்த முதல்வராலும் செய்ய முடியாத பல்வேறு திட்டங்களை செய்து முடித்துள்ளார். குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் ரயில்வே மேம்பாலம் கருணாநிதி காலத்தில் அமைக்கப்பட்டதுதான். சிதம்பரம் அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டடங்கள், புறநோயாளிகள் கட்டடம், அறுவைச் சிகிச்சை கட்டடம், மகப்பேறு மருத்துவப் பிரிவு, கூடுதல் கழிப்பறை கட்டடம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. பி.முட்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை, ஒரத்தூர், கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை மேம்படுத்த போராடிய சுவாமி சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் இதுவரை அந்த கட்டடம் கட்டுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

    கருணாநிதி முதல்வராக இருந்த போது சமச்சீர்கல்வி திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டத்தை அடியோடு ரத்து செய்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சமச்சீர் கல்வி திரும்ப வந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மாற்றம் வேண்டுமென அதிமுகவை ஆட்சியில் மக்கள் அமர்த்தினர். ஆனால் ஆட்சி மாற்றம், அமைச்சர்கள் மாற்றமாகத்தான் உள்ளது.

    அதிமுக ஆட்சியில் திமுகவினர் மீதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீதும் ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சவில்லை. எத்தனை வழக்குப் போட்டாலும் அவற்றை எதிர்கொள்வோம்.

    தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் நடக்கின்றன. சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற, மத்தியில் நாம் இருக்கிற ஆட்சி அமைய, ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமாவளவனுக்கு வாக்களியுங்கள் என்றார் மு.க.ஸ்டாலின்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai