Enable Javscript for better performance
பழனி அருகே 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

    By dn  |   Published on : 24th March 2014 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருகே 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஆண்டுகள் வரையிலான கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள் மூன்றுத் தொகுதிகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பழனி அருகே பாப்பம்பட்டியை அடுத்த மாயவன்கரடு மலைப்பகுதியில் பழனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்ட போது கற்கால மனிதர்கள் வரைந்த பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்ததாவது:

    பாப்பம்பட்டி பகுதியில் முன்பே பழமையான குகை ஓவியங்கள், காலத்தைக் கணிக்கும் பழங்காலத் திட்டு அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை ஓவியங்கள் காலத்தால் மிகப்பழமையானவை. பலவும் இயற்கைச் சீற்றத்தால் சிதிலமடைந்துள்ளன.

    இவை அனைத்துமே வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கற்கால மனிதர்களால் வரையப்பட்டவை. வெள்ளை நிற ஓவியங்கள், ரத்தச்சிவப்பு நிற ஓவியங்கள் மற்றும் மஞ்சள் நிற ஓவியங்கள் என இவை மூன்றுத் தொகுதிகளாக உள்ளன.

    வெள்ளை நிறத்தில் காணப்படும் ஓவியத்தில் மான், மாடு, யானை, கொக்கு போன்ற பறவை, விலங்கினங்களும், வேட்டையாடும் நிகழ்வும் வரையப்பட்டுள்ளன.

    இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். அடுத்துள்ள ரத்தச்சிவப்பு நிற ஓவியங்கள் சிதிலமான நிலையில் பல்வேறுக் குறியீடுகள் தென்படுகிறது. இவை எவற்றைக் குறிக்கின்றன எனத் தெரியவில்லை. இவை சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கலாம்.

    அடுத்ததாகக் காணப்படும் மஞ்சள் நிற ஓவியம் முக்கியத்துவம் பெற்றதாகும். இது சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்த டைனோசரை போன்று வரையப்பட்டுள்ளன.

    தடித்தவால், நான்கு கால்கள், முதுகில் பெரிய திமில், குட்டையான கழுத்துடன் திறந்தவாயுடன் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் குப்ரிக் ஆசிட் எனப்படும் ஒருவகையான கலரில் வரையப்பட்டுள்ளன. மூலிகைகள், சிலவகைச் செடிகளின் வேரில் இருந்து தயாரிக்கப்படும் வர்ணத்தை குப்ரிக் ஆசிட் எனக் கூறுவர்.

    இந்த ஓவியத்தின் வயது சுமார் 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ஆண்டு வரை உள்ள நிலையில், அழிந்த டைனோசர் இனம் இடைப்பட்ட காலத்தில் இருந்து அழிந்து போன விலங்காக இருக்கக்கூடும். ஆறரைக் கோடி ஆண்டுகள் வரை அதிகபட்ச பரப்பில் வாழ்ந்து அழிந்த உயிரினங்கள் தமிழகத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருக்கலாம்.

    இதே போல டைனோசர் இன விலங்குகளை மனிதர்கள் இழுத்துச் செல்வது போன்ற அரியபடங்கள் ஆந்திர மாநிலம் திருமலை வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai