சுடச்சுட

    

    பாஜகவில் மூத்த தலைவர்கள் ஒதுக்கப்படவில்லை: வெங்கய்ய நாயுடு

    By dn  |   Published on : 24th March 2014 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkiah

    பாஜகவில் மூத்த தலைவர்கள் யாரும் ஒதுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

    சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

    பாஜகவில் அத்வானி, ஜஸ்வந்த் சிங் போன்ற மூத்த தலைவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் அளிக்கப்பட்டு வருகிறது. யாரும் ஓரம் கட்டப்படவில்லை. மூத்த தலைவரான அத்வானியின் ஆலோசனையை கட்சி பெற்று வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலத் தலைமை எடுத்த முடிவினால்தான் ஜஸ்வந்த் சிங்கிற்கு பார்மர் தொகுதியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. மூத்த தலைவர்கள் உள்பட அனைவரும் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    பாஜகவில் 90 சதவீத தொகுதிகள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 10 சதவீத இடங்கள் மட்டுமே புதியவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அனைத்துக் கட்சிகளிலும் பிரச்னை ஏற்படுவது வழக்கமானது. ஆனால், பாஜகவில் நடக்கும் சிறுசிறு சம்பவங்களைக்கூட பெரிய மோதல் போல சித்தரிக்கிறார்கள்.

    நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. மோடியை பிரதமராக்க மக்கள் தயாராகி விட்டனர். காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒதுக்கிவிட்டனர். தேசிய மாநாட்டுக் கட்சி, தேசியவாத காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் தோல்வி பயத்தினால் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கி விட்டனர்.

    1967-க்குப் பிறகு, தமிழகத்தில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளைக் கொண்ட வலுவான மாற்று அணி உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்கும்.

    மோடி அலை தமிழகத்தையும் விóட்டு வைக்கவில்லை. திமுக தலைவர் கருணாநிதியும், அவரது மகன் மு.க. அழகிரியும் மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளனர்.

    தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 50 சதவீத இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நாடு முழுவதும் 300-க்கும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றார் வெங்கய்ய நாயுடு.

    பேட்டியின்போது, கட்சியின் தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    தனி ஈழத்தை பாஜக ஆதரிக்காது

    கூட்டணிக் கட்சிகளின் கொள்கைகளை அப்படியே பாஜக ஏற்காது. பொதுவான செயல்திட்டத்தின் அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும். இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஆதரிக்காது. அதே நேரத்தில், அங்கு வாழும் தமிழர்களுக்கு, சிங்களர்களுக்கு இணையாக சம உரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். இதற்காக பாஜக குரல் கொடுக்கும் என்றார் வெங்கய்ய நாயுடு.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai