சுடச்சுட

    

    பாஜக கூட்டணியை விமர்சிக்காதது ஏன்? ஜெயலலிதாவுக்கு ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி

    By dn  |   Published on : 24th March 2014 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramakrishnan

    வகுப்புவாத பாஜக மற்றும் அதன் சந்தர்ப்பவாதக் கூட்டணி குறித்து பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்யாதது ஏன்? என்பதை அவர் விளக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.

    திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

    கடந்த 11 நாள்களாக தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி குறித்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்து எந்தக் கருத்தையும் அவர் தெரிவிப்பதில்லை. காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

    இதில் ஒத்தக்கருத்துள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து கடந்த இரண்டு முறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்றார். அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கொடுத்தனுப்பிய உரைகளையும் படித்தார். ஆனால், திடீரென "நட்புடன் பிரிவோம்' எனச் சொல்லி அனுப்பினார். அதனால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தமிழ்நாட்டின் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

    இப்போது அதிமுகவின் நிலைப்பாடு என்ன? பாஜகவைப் பற்றி எந்த இடத்திலும் விமர்சனம் செய்யவில்லை. மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு உருவாகும் என்கிறார். காங்கிரஸ் மேற்கொண்ட அதே பொருளாதாரக் கொள்கையைத்தான் பாஜகவும் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டில் மதவெறி, சாதி வெறி மற்றும் சந்தர்ப்பவாதக் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அதுகுறித்தும் முதல்வர் ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொறுப்பு அதிமுக பொதுச்செயலருக்கு இருக்கிறது.

    மற்ற தொகுதிகளில்?

    இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் 18 இடங்கள் தவிர்த்து மீதமுள்ள 22 தொகுதிகளில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

    வேட்புமனு தாக்கல் தொடங்கியபிறகு, அந்தத் தொகுதிகளில் உள்ள நிலைக்கேற்ப எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என முடிவு செய்யப்படும். தொகுதிக்குத் தொகுதிகூட இந்த ஆதரவு வேறுபடலாம்.

    தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் உள்ளிட்டோர் விரைவில் வரவுள்ளனர் என்றார் ராமகிருஷ்ணன்.

    பேட்டியின்போது, திருச்சி தொகுதி வேட்பாளரும், மாவட்டச் செயலருமான எஸ். ஸ்ரீதர், மாநிலக் குழு உறுப்பினர் முகமது அலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கேவிஎஸ். இந்துராஜ், அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai