Enable Javscript for better performance
வேலூர், தஞ்சாவூர் பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் திங்கள்கிழமை (மார்ச் 24) அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

    தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் பாஜக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரியில் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தென் சென்னையில் மூத்த தலைவர் இல.கணேசன், சிவகங்கையில் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா, கோவையில் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் து.குப்புராமு, நீலகிரி (தனி) தொகுதியில் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இவர்கள் 6 பேரும் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில் வேலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. வாக்குப் பதிவுக்கு 30 நாள்களே இருக்கும் நிலையில் வேட்பாளர் அறிவிப்பில் தாமதிப்பது காங்கிரûஸப் போல பாஜகவும் மாறி வருவதைக் காட்டுவதாக அக்கட்சியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

    கோவை தொகுதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை மாற்றக்கோரி, அக்கட்சியினரே மாவட்ட அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அதுபோல எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதால் இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    பாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக வேட்பாளராக வேலூரில் போட்டியிட முயற்சித்து வருகிறார். பாஜக தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அத்தொகுதி மதிமுகவுக்கு சென்று விட்டதால் அவர் வேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரியுள்ளார்.

    தஞ்சாவூர் தொகுதியில் மாநிலப் பொதுச் செயலாளர்கள் எம்.எஸ்.ராமலிங்கம், கருப்பு முருகானந்தம் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் முடிவெடுக்க முடியாத நிலை பாஜக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் திங்கள்கிழமை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai