சுடச்சுட

    

    அமைச்சர் ஜெயபால் பொய்யான தகவல் அளிக்கவில்லை: பாஸ்போர்ட் விவகாரத்தில் அதிகாரி பதில் மனு தாக்கல்

    By dn  |   Published on : 25th March 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Jayapalminister

    தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் பாஸ்போர்ட் பெறுவதற்கு பொய்யான தகவல்களை அளிக்கவில்லை; எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.களியமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

    நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஏ.ஜெயபால் தற்போது மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு தக்கல் முறையில் பாஸ்போர்ட் பெற்றார். இதற்காக, பொய்யான வீட்டு முகவரி, ஐஏஎஸ் அதிகாரியிடம் இருந்து பொய்யான சரிபார்ப்புச் சான்றிதழ் உள்பட பல்வேறு தவறான தகவல்களை அளித்துள்ளார்.

    மேலும், இவர் மீது நாகப்பட்டினம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, உண்மைகளை மறைத்து, தவறான சான்றிதழ்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற அமைச்சர் ஜெயபால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை (மார்ச் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சி.செந்தில் பாண்டியன் பதில் மனுத் தாக்கல் செய்தார்.

    அந்த பதில் மனு விவரம்: மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் பாஸ்போர்ட் பெறுவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி தக்கல் முறையில் விண்ணப்பித்தார். அப்போது, அவருக்கு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்காக அரசு வழங்கிய ஆணையின் நகலையும் அத்துடன் இணைத்திருந்தார்.

    மேலும், பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அவரது விண்ணப்பத்துடன் இணைத்திருந்தார். இது தவிர, போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையின் அடிப்படையில்தான் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. பிறகு, சென்னை போலீஸ் ஆணையரிடம் இருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெளிவான அறிக்கை பெறப்பட்டது.

    இந்நிலையில், அமைச்சர் ஜெயபால் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கியமான தகவல்களை மறைத்துள்ளதாகவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனுதாரரிடமிருந்து கடிதம் பெறப்பட்டது.

    இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் ஜெயபாலுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அவர், கடந்த மாதம் 12-ஆம் தேதி விளக்கம் அளித்தார். அப்போது, தன்னை வழக்கில் சிக்க வைப்பதற்காக மனுதாரர் அவ்வாறு செய்ததாகவும், இதுவரை தன் மீது எந்தக் குற்றமும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

    எனவே, அமைச்சர் ஜெயபால் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai