சுடச்சுட

    

    அழகிரியுடன் மதிமுக, பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்திப்பு

    By dn  |   Published on : 25th March 2014 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mdualakiri

    திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க.அழகிரியை, மதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தனித்தனியே சந்தித்து ஆதரவு கேட்டனர்.

    மதிமுக பொதுச் செயலர் வைகோ அழகிரியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு கேட்டார். இருவரும் அரை மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து மதிமுகவின் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் க.அழகுசுந்தரம் அழகிரியை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு கேட்டார். அவருடன், மதுரை மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன், தேனி மாவட்டச் செயலர் சந்திரன் ஆகியோர் உடன் வந்தனர்.

     பின்னர் அழகுசுந்தரம் கூறுகையில், தென் தமிழகத்தை தனது சுட்டுவிரலில் வைத்திருக்கக் கூடியவர் அழகிரி. அவரை தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டேன்.

    மதிமுகவைத் தொடர்ந்து, பாஜக மாநிலச் செயலரும் அக் கட்சியின் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா அழகிரியை சந்தித்து ஆதரவு கோரினார்.

     அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்-கை தில்லியில் அழகிரி சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதை வரவேற்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், மக்களவைத் தேர்தலில் எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்வதற்காக அவரைச் சந்தித்தேன். அவரும் இதைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார். இதைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் அவரிடம் பேசவில்லை. மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதை நல்ல எண்ணத்துடனும், உணர்வுப் பூர்வமாகவும் கூறியிருக்கிறார். அவரது கருத்து தென் மாவட்டங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

     மற்ற கட்சியினரும் அழகிரியிடம் ஆதரவு கேட்டுள்ளனரே எனக் கேட்டதற்கு, மோடியைத்தான் பிரதமர் ஆக வேண்டும் என அழகிரி கூறியிருக்கிறார். அதற்கு நன்றி சொல்வதற்காக மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். இது எனது தனிப்பட்ட சந்திப்பு என்று பதில் அளித்தார்.

     இதைத் தொடர்ந்து, மதுரை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டி.என்.பாரத் நாச்சியப்பன் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினார். அவருடன் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.சேதுராமன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

     சந்திப்புக்கு பின்னர் பாரத் நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறியது:  மதுரையின் மக்களவை உறுப்பினராக அழகிரி சிறப்பான பணியை ஆற்றியுள்ளார். மதுரை தொகுதிக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். மேலும் 5 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தவர் என்ற முறையில், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து நன்றி கூறியுள்ளார். அவரது இத்தகைய செயல்பாடு பாராட்டுக்குரியது. அவர்விட்ட பணிகளைத் தொடர ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai