Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஸ்ரீபால் காலமானார்- Dinamani

சுடச்சுட

    
    sripal

    ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஸ்ரீபால் (76) சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.

    தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக பணியாற்றிய ஸ்ரீபால் சென்னை தியாகராயநகர் கண்ணதாசன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை அவருக்கு

    நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

    இறந்த ஸ்ரீபாலுக்கு கமலி என்ற மனைவியும், சுப்ரியா, ஹேமா என இரு மகள்களும், ஸ்ரியாஸ் என்ற மகனும் உள்ளனர். கமலி "கோகுலம் கதிர்' இதழில் ஆசிரியராக உள்ளார். மகள் சுப்ரியா

    அமெரிக்காவில் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். ஸ்ரியாஸ் தொழிலதிபராக உள்ளார்.

    அதிக ஆண்டு ஆணையராக...: ஸ்ரீபாலின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள மெருதூர். ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற ஸ்ரீபால், தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கியப்

    பதவிகளை வகித்தார். குறிப்பாக 1980-ஆம் ஆண்டு முதல் 1985-ஆம் ஆண்டு வரை சென்னை பெருநகர காவல் ஆணையராக பதவி வகித்தார். சென்னை காவல் ஆணையராக அதிக ஆண்டுகள் பதவி

    வகித்தவர் ஸ்ரீபால் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 1991-ஆம் ஆண்டு முதல் 1996 வரை டி.ஜி.பி.யாக பதவி வகித்தார்.

    டி.ஜி.பி.யாக ஸ்ரீபால் இருந்த காலக்கட்டத்தில் தமிழக காவல்துறையை நவீனமயமாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக அவர் காலத்தில்தான் கைரேகை பிரிவு கம்ப்யூட்டர்

    மயமாக்கப்பட்டது. இதேபோல், ஸ்ரீபால் சென்னை காவல்துறை ஆணையராக இருந்தபோதுதான் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டார்.

    மேலும், பாண்டி பஜாரில் துப்பாக்கியுடன் சண்டைப் போட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ராகவன் எனப்படும் சிவக்குமார், முகுந்தன் எனப்படும் உமா மகேஸ்வரன், ஜோதீஸ்வரன்

    ஆகியோரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தார்.

    ஸ்ரீபால் சிறந்த காவல்துறை அதிகாரியாக மட்டுமன்றி, மனிதநேயம் மிக்கவராகவும், இலக்கியவாதியாகவும் இருந்துள்ளார்.

    காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீபால் ஜெயின் சமூக ஆய்வு அறக்கட்டளை தலைவராக இருந்துள்ளார். மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் கௌரவ விரிவுரையாளராகவும் ஸ்ரீபால் பணியாற்றினார்.

    ஸ்ரீபால் உடலுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு கண்ணம்மாள்பேட்டை மயானத்தில் வியாழக்கிழமை நண்பகல் 12.30

    மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai