சுடச்சுட

    

    காங்கிரஸை தோற்கடிப்பது மட்டுமே பாஜகவின் நோக்கம்: முரளிதரராவ்

    By dn  |   Published on : 25th March 2014 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    murali

    வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிப்பது மட்டுமே பாஜகவின் நோக்கம் என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:

    தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்திருப்பது தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

    இதற்காக 39 தொகுகளிலும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். இதில் அனைத்து கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள். நரேந்திர மோடி, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்யவுள்ளனர். அதற்கான இடமும், தேதியும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் 100-க்கும் அதிகமான இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

    தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, வளர்ச்சித் திட்டங்கள், மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்து பிரசாரம் செய்வோம். பாஜக கூட்டணிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே, பெரும்பாலான இடங்களை எங்கள் கூட்டணி கைப்பற்றும். தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்வதற்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் தவறான செயல்பாடுகளே காரணம். மாநில அரசின் மீது பழிபோட்டு மத்திய அரசு தப்பிக்க முடியாது.

    கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்ற காங்கிரஸை ஆட்சியில் இருந்தது அகற்றுவது மட்டுமே பாஜகவின் நோக்கம்.

    ஜஸ்வந்த் சிங் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவது துரதிருஷ்டவசமானது. அவருக்கு கட்சி ஏராளமான வாய்ப்புகளை வழங்கியது. இதனால் பாஜகவுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. இது ஒரு சிறிய பிரச்னை மட்டுமே.

    புதுச்சேரியில் பாமக போட்டியிடுவது குறித்து நான் எதுவும் கூற முடியாது. நான் தமிழகத்துக்கு மட்டுமே பொறுப்பாளர். வேலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படுவார்கள் என்றார் முரளிதரராவ்.

    பேட்டியின்போது தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai