Enable Javscript for better performance
கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு: வாலிபரின் தூக்கை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு: வாலிபரின் தூக்கை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

    By dn  |   Published on : 25th March 2014 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    highcourt

    கோவையில் பள்ளிக் குழந்தைகள் இருவரை கடத்திக் கொலை செய்த வாலிபருக்கு கோவை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

    கோவையைச் சேர்ந்த ரஞ்சித்குமார்-சங்கீதா தம்பதியரின் பெண், ஆண் குழந்தைகள் கடந்த 2010 அக்டோபர் 29-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற போது கடத்திக் கொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் கோவை பி.ஏ.பி. வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வெரைட்டி ஹால் சாலை போலீஸார், குழந்தைகளை கடத்தி, பாலியல் வன்முறை செய்து கொலை செய்ததாக மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களை, காவலில் வைப்பதற்காக அழைத்துச் சென்றபோது, போலீஸ் வாகனத்தில் இருந்து மோகனகிருஷ்ணன் தப்பிக்க முயன்றார். அப்போது, போலீஸாரிடம் இருந்த ஆயுதம் வெடித்ததில் மோகனகிருஷ்ணன் இறந்தார். இவ்வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் 2012 நவம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

    இந்த தண்டனையை எதிர்த்து மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் எஸ்.சண்முகவேலாயுதம் ஆஜரானார்.

    விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

    பள்ளி செல்வதற்காக நின்றிருந்த குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில், பெண் குழந்தை கூட்டாக பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளார். பிறகு பாலில் மாட்டுச் சாணத் தூளை கலந்து கொடுத்து கால்வாயில் தள்ளி இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கைப் பொருத்தவரை மோகனகிருஷ்ணனும், மனோகரனும் சேர்ந்து பணத்துக்காக குழந்தைகளை கடத்தவில்லை என்பது தெரிகிறது. அதேசமயம், அந்தப் பெண் குழந்தையை கூட்டாக பாலியல் வன்முறை செய்தது மற்றும் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக மனோகரனுக்கு மகளிர் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்கிறோம்.இந்தக் குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி மனோகரனுக்கு எதிராக நிரூபணமாகியுள்ளது. இதற்காக மகளிர் நீதிமன்றம் மனோகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. மேலும், மனோகரன் இந்தக் குற்றத்தைச் செய்யும் போது மன ரீதியாகவோ, உணர்ச்சிவசமாகவோ அல்லது இதர பிரச்னையிலோ இல்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.

    இதே போன்று சிறுவன் ஒருவனை பணத்துக்காக கடத்தி கொலை செய்த வழக்கில் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இங்கு இரண்டு குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒரு குழந்தையை கூட்டாக பாலியல் வன்முறை செய்துள்ளனர். அதனால், மனோகரனுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை நாங்கள் உறுதி செய்கிறோம். மனோகரனின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai