சுடச்சுட

    

    ஜெயலலிதாவுக்கு மக்களின் கஷ்டம் தெரியாது: விஜயகாந்த் பேச்சு

    Published on : 25th March 2014 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vkanth

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்களின் கஷ்டம் தெரியாது என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிவிக்கப்படாத பாஜக வேட்பாளரை ஆதரித்து தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

    சோழநாடு சோறுடைத்து என்று சொல்வார்கள். முன்பெல்லாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று போகம் நெல் விளைந்தது. ஆனால் தற்போது ஒரு போகம் தான் விளைகிறது. அதுவும் மோட்டார் பம்புசெட் மூலம் தான். மின்சாரம் இல்லாததால் எங்கு பார்த்தாலும் நெல்லுக்கு பதில் தென்னைதான் தெரிகிறது. அதில் இளநீர் இருக்கிறதோ இல்லையோ, மக்களின் கண்ணீர் இருக்கிறது. இதெல்லாம் முதல்வருக்கு தெரியாது. அவங்க வானத்திலேயே வந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மக்களின் கஷ்டம் தெரியாது.

    மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால் வேறு ஒரு தண்ணீருக்கு  மட்டும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

    தஞ்சாவூர் தொகுதியின் தற்போதைய திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு, தன்னுடைய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை துபை ஆக்கிவிட்டார். இப்போ தஞ்சாவூரை சிங்கப்பூராக்க வந்துள்ளார். இதை நான் சொல்லவில்லை. அவங்க கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் சொல்கின்றனர். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மின்சாரம் தராமல் மக்களை ஏமாற்றி வருகின்றன.

     டி.ஆர். பாலுவுக்கு இங்கு சாராய ஆலை உள்ளதால்தான் அவர் இங்கு போட்டியிடுகிறார். ஏற்கெனவே அவருடைய மகன் எம்எல்ஏவாக உள்ளார். அப்பாவும், மகனும் சேர்ந்து சாராய ஆலையை பார்த்துக் கொள்ள வந்துள்ளனர் என்று நான் சொல்லவில்லை, பழனிமாணிக்கம் சொல்கிறார்.

    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த ராசாவுக்கு ஊட்டியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் திமுக. மக்கள் விரும்புவதை புரிந்து கொள்ளும் அரசு இருக்க வேண்டும். அதிமுக, திமுக சேர்ந்துதான் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக அமைச்சர்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. நரேந்திர மோடியை பிரதமராக்க தாமரைச் சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.

    நான்கரை மணிநேரம் காத்திருந்த கட்சியினர்:

    தஞ்சாவூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாலை 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய பிரசார வேன் பழுதடைந்ததால் அவர் இரவு 7.35 மணிக்குத்தான் தஞ்சாவூர் பனகல் கட்டடம் வந்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கடும் வெயிலில் நான்கரை மணிநேரம் காத்திருக்க நேர்ந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai