சுடச்சுட

    

    தேர்தல் பாதுகாப்புப் பணியில் 10,000 துணை ராணுவப் படையினர்

    By dn  |   Published on : 25th March 2014 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    voting-security

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அவர்கள் வாக்குப் பதிவு தொடங்கும் சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, பதற்றமானவையாக இதுவரை 9 ஆயிரத்து 428 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பார்வையாளர்களின் ஆய்வுக்குப் பிறகு அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது போன்ற பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலக அதிகாரிகள் கூறியது:

    தமிழகத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில், பதற்றமான வாக்குச் சாவடிகள் எவை என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. கடந்த தேர்தலில் 90 சதவீதத்துக்கு அதிகமாகவும், மிகவும் குறைவாகவும் வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகள் மிகவும் சிக்கலானவையாகவும், வாக்காளர்களைத் தடுப்பது, மிரட்டுவது போன்றவை பாதிப்புக்குரிய வாக்குச் சாவடிகளாகவும் அறியப்படுகின்றன. மொத்தத்தில் பதற்றம் நிறைந்தவையாக இதுவரை 9 ஆயிரத்து 428 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    துணை ராணுவப் படையினர்: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட உள்ளனர். ஒரு கம்பெனி படையினர் என்பது 100 காவலர்களை உள்ளடக்கியது. அதன்படி, 10 ஆயிரம் காவலர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வரவுள்ளனர். அவர்கள் வாக்குப் பதிவு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வருவார்கள்.

    ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க பொது பார்வையாளரும், வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை பார்வையிட செலவின பார்வையாளரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளாக இருப்பார்கள். வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளில் பொது பார்வையாளரும், வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளில் செலவின பார்வையாளரும் தங்களது பணிகளைத் தொடங்குவார்கள்.

    இதுவரை ரூ.12 கோடி: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.12 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai