தேர்தல் முடிவு ஆச்சரியம் அளிக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்
By dn | Published on : 25th March 2014 04:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தமிழகத்தில் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் என மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் என்.பாண்டியை அறிமுகப்படுத்தி சிறப்புரை நிகழ்த்துவதற்காக வந்த அவர் செயதியாளர்களிடம் தெரிவித்தது:
கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோத கொள்கையை கடைபிடித்து வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மீதும், அதற்கு துணை நின்ற திமுக மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றி வரும் காங்கிரசையும், வகுப்பு வாத பாஜகவையும் தவிர்த்து ஒரு மாற்று அரசு அமைக்க இடதுசாரிகள் தரப்பில் முயற்சித்து வருகிறோம்.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் போட்டியிடாத 22 தொகுதிகளில் பாஜக அணி, திமுக அணி, அதிமுக, காங்கிரஸ் என யாரையும் ஆதரிக்க கூடாது என முடிவு செய்துள்ளோம். வகுப்பு வாதம், தவறான பொருளாதார கொள்கை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்வோம். மேலும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம். கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும். தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும்.
மத்தியில் மாற்று அரசு அமைவதன் மூலம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். அதற்கான மாற்று கொள்கை இடதுசாரிகளிடம் மட்டுமே உள்ளது. காங்கிரசுக்கு மாற்று பாஜக அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாநில கட்சிகளும் மாற்று கிடையாது. அவர்களுக்கு மாற்றாக விளங்கும் இடதுசாரிகளுக்கு, மக்களிடம் ஆதரவு கிடைக்கும்.
முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் மதவாதம் மற்றும் ஜாதிய அமைப்புகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மத்தியில் ஊழலற்ற, நேர்மையான அரசு அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் என்றார் அவர்.