சுடச்சுட

    

    புத்தூர் காவல்நிலையம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கு: சுப.இளவரசன் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

    By dn  |   Published on : 25th March 2014 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    elavarasan

    கடலூர் காவல்நிலையம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த சுப.இளவரசன் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

    கடலூர் மாவட்டம், புத்தூர் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெடிகுண்டு வீசியும், போலீஸாரை தாக்கியும் சிலர் ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இந்த தாக்குதலில் ராஜேந்திரன் என்ற போலீஸார் உயிரிழந்தார். மேலும் 4 போலீஸார் காயமடைந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த இளவரசன் என்ற சுபஇளவரசன், சூ என்ற சுந்தரம், வெங்கடேசன், அமுல்ராஜ், குமார், நல்லரசு, ரவி, செங்குட்டுவன் என்ற மணிமாறன், முருகேசன், லெனின், இளங்கோமணி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதில் லெனின் என்பவர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே இறந்துவிட்டார். இளங்கோமணி அரசு தரப்பு சாட்சியமாக மாறினார்.

    இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இதனிடையே கடந்த 20-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமி, குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

    மேலும் அவர்களுக்கான தண்டனை மார்ச் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில் திங்கள்கிழமை (மார்ச் 24) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சுபஇளவரசன், வெங்கடேசன், அமுல்ராஜ், குமார், நல்லரசு, ரவி, செங்குட்டுவன் என்ற மணிமாறன், முருகேசன் ஆகிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், சூ என்கிற சுந்தரத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் சூ என்கிற சுந்தரம் ஏற்கெனவே 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டதால், இவர் சிறையில் இருந்த காலத்தை தற்போதைய தண்டனையில் இருந்து கழித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு சுந்தரம் விடுவிக்கப்பட்டார்.

    இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரையும் போலீஸார் புழல் சிறைக்கு கொண்டுச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai