சுடச்சுட

    

    மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை முன்கூட்டியே எதிர்க்காதது ஏன்? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    By dn  |   Published on : 25th March 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supremecourt

    சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான பறக்கும் சாலைத் திட்டத்தை அதன் தொடக்க காலத்திலேயே எதிர்க்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    இத் திட்டம் தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதை தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை பரிசீலித்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, "கூவத்தின் நடுவே பறக்கும் சாலைக்கான மேம்பாலத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மழைக் காலங்களில் நீரோட்டம் தடுக்கப்படும்; வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் மிகப்பெரிய பாதிப்புகள் நேரலாம்' என்று வாதிட்டார்.

     அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "கூவம் ஆற்றின் குறுக்கே இத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை எவ்வாறு தமிழக அரசு அறியாமல் போனது? இதைத்  தொடக்க காலத்திலேயே தடுத்திருக்கலாமே? அப்போது ஆட்சேபம் தெரிவிக்காமல் திடீரென்று வழக்குத் தொடருவது ஏன்?' என்று கேள்வி எழுப்பினர்.

     அதற்கு முகுல் ரோத்தகி, "முதலில் கூவத்தை ஓட்டிய பகுதியில் தூண்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியது. இதனால், திட்டத்துக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், திட்டம் செயல்வடிவம் பெறும்போது கூவத்துக்கு நடுவே தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன' என்றார்.

     இது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு வழக்குரைஞர் ஆஜராகியுள்ளாரா என்று நீதிபதிகள் கேட்டனர். ஆனால், மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் குலாம் இ. வாகனவதி நீதிமன்றத்தில் இல்லை. இதையடுத்து, தமிழக அரசு மனு மீதான விசாரணையை வரும் ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

     பின்னணி: தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே சுமார் ரூ. 1,800 கோடி மதிப்பில் நான்கு வழி பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 2008-ஆம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் தெரிவித்திருந்தது. மொத்தம் 18.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இத் திட்டத்துக்காக கூவம் ஆற்றின் நடுவே 35 தூண்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை எழுப்பியது. இதனால், கூவம் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படுவதாகக் கூறி திட்டத்துக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை வழக்குத் தொடர்ந்தது.

     "தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம்' என்று கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai