சுடச்சுட

    

    மோடியின் நிர்பந்தத்தால்தான் இடதுசாரிகளை வெளியேற்றினார் ஜெயலலிதா: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 25th March 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pc2

    நரேந்திர மோடியின் நிர்பந்தம் காரணமாகவே கூட்டணியிலிருந்து இடதுசாரி கட்சிகளை ஜெயலலிதா வெளியேற்றினார் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு காங்கிரஸ் அல்லது பாஜகவால் மட்டுமே ஆட்சி அமைக்க  முடியும். இது அரசியல் பாலபாடம்.

    இந்த இரண்டு கட்சிகளைப் பற்றியும், அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பற்றியும் தங்கள் நிலைப்பாட்டை அதிமுகவும், திமுகவும் தெரிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    அதிமுக எடுக்கக் கூடிய நிலைப்பாட்டில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் கட்சி அதிமுக. கர சேவைக்கு ஆதரவு, ராமர் கோவில் கட்டுவது,  சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவது, பொதுசிவில் சட்டம் என பல விஷயங்களில் இந்த இரு கட்சிகளின் கொள்கைகளும் ஒன்றுதான்.

    இடதுசாரி கட்சிகள் பாஜகவை விமர்சிப்பார்கள் என்பதற்காகவே அவர்களை கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றியுள்ளார். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நிர்பந்தத்தால் தான் இந்த முடிவை அவர் எடுத்தார்.

    அதிமுக அங்கம் வகிக்கும் அரசு என்று சொல்கிறாரே தவிர, யாருடைய தலைமையிலான அரசில் அங்கம் வகிப்போம், யாருடைய தலைமையிலான அரசில் அங்கம் வகிக்க மாட்டோம் என்பதை ஜெயலலிதா ஏன் தெளிவுபடுத்தியது இல்லை. காங்கிரஸின் கொள்கைகளையும், திட்டங்களையும் விமர்சிக்கும் ஜெயலலிதா, பாஜகவின் கொள்கைகள் எதையும் விமர்சிப்பதில்லை.

    அதிமுகவை பாஜகவின் பி அணி என ஏற்கெனவே கூறியுள்ளேன். முதல்வரின் காரைக்குடி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு அதை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன்.

    தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும். அப்போது அக்கட்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டும் முதல் கட்சியாக அதிமுக இருக்கும் என எச்சரிக்க விரும்புவதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

     அதிமுக குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள ப. சிதம்பரம், திமுகவின் நிலைப்பாடு குறித்து தனது கருத்தை செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) தெரிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai