சுடச்சுட

    

    வாகனச் சோதனை என்ற பெயரில் வர்த்தகர்களை துன்புறுத்தக் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு

    By dn  |   Published on : 25th March 2014 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    PRAVEENKUMAR

    வாகனச் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இருந்தால் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களை துன்புறுத்தாமல் அவர்களது பணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு:

    அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமே ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் பிரமுகர்கள், கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்தும். அதனால், மற்ற நபர்களும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

    நேர்மையான முறையில் வணிகம் செய்யும் ஒரு நபர் பணத்தை எடுத்துச் செல்லும் போது அந்த வணிகரின் பின்புலம், அவர் எடுத்துச் செல்லும் பணத்துக்கான உரிய ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ஆராயப்படும். அதன் பின்பு தகுந்த ஆவணங்கள் இல்லாவிட்டால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும்.

    வாகனச் சோதனையின் போது, அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களைத் தர முடியாத பட்சத்தில் பணம் எடுத்துச் செல்லப்படுவதற்கான நோக்கம், எடுத்துச் செல்லப்படக் கூடிய பணம் சட்ட ரீதியாக எங்கிருந்து பெறப்பட்டது ஆகியவற்றை நிரூபித்தால் போதுமானது.

    கேட்கும் ஆவணங்களை சரியாக அளித்தால் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை வாகனச் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களை துன்புறுத்தக் கூடாது.

    விசாரணை இல்லாமல் பறிமுதல் செய்யக் கூடாது: வாகனச் சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர், உரிய விசாரணைகள் இல்லாமல் உடனடியாக பணத்தை பறிமுதல் செய்யக் கூடாது. பணம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்வது என்பது தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட உரிய விதிமுறைகளின் கீழ் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

    வாகனச் சோதனையின் போது, ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் இருக்குமானால், உடனடியாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை மற்றும் கண்காணிப்புப் படை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையையும், பெயர் எழுதப்பட்டுள்ள பேட்ச்சையும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இதனை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    வாகனச் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்கள் குறித்து சந்தேகம் எழுந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொண்டு அவர்கள் பற்றிய விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    வாகனச் சோதனையில் ஈடுபடுவோர் கடுமையான முறையிலோ அல்லது தேவையில்லாத வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது என்று பிரவீண்குமார் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai