சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) கடைசி நாளாகும். இனி மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றங்களைச் செய்யவும் முடியும்.

    ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி மாதத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில் 5.37 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த மார்ச் 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.95 லட்சம் பேர் மனுக்கள் அளித்துள்ளனர். மேலும், கடந்த 16-ஆம் தேதி நடத்தப்பட்ட மற்றொரு சிறப்பு முகாமில் 2 ஆயிரத்து 806 பேர் மனுக்களை அளித்திருந்தனர்.

    வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி வரப்பெற்ற மனுக்களை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. சிறப்பு முகாமில் இந்த அளவுக்கு மனுக்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும், இந்த மனுக்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் எனவும் தேர்தல் துறை அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.

    சிறப்பு முகாம்களைத் தவிர்த்து, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க மார்ச் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) கடைசி நாளாகும்.

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளம் (ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) மூலம் ஆன்-லைன் முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாய்ப்பும் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 25) முடிவுக்கு வருகிறது.

    வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களைச் செய்வதற்கான காலக்கெடு ஏற்கெனவே முடிந்துள்ளது. இனி, மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகே அவற்றில் மாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai