Enable Javscript for better performance
விஜயகாந்தின் திருவாரூர் பிரசாரம் ரத்து- Dinamani

சுடச்சுட

    
    vijaykan

    பிரசார வாகனத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, திருவாரூரில் திங்கள்கிழமை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாகை மக்களவைத் தொகுதி (தனி) பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் ஏறத்தாழ வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு முடிந்தும் நாகை தொகுதிக்கான பாமக வேட்பாளர் திங்கள்கிழமை இரவு 9 மணி வரையிலும்  அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தங்கள் கூட்டணியின் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக திங்கள்கிழமை திருவாரூர் கீழவீதியில் மாலை 6 மணிக்கு பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    மாலை 4 மணியிலிருந்து திருவாரூரில், நாகைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலிருந்து தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக தொண்டர்கள் வாகனங்களில் வரத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. தொண்டர்கள் குத்தாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேடையில் கட்சி நிர்வாகிகள் விஜயகாந்த் வருவார் என்று முதலில் அறிவிப்பு செய்துவிட்டு, மத்திய, மாநில ஆட்சிகளின் குறைகள் குறித்து பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.

    இரவு 7.55 மணிக்கு தஞ்சாவூர் கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு, விஜயகாந்த் திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்று தகவல் பரவியது. இதனால், தொண்டர்களின் உற்சாகம் மேலும் கூடியது.

    இதனிடையே, இரவு 8.25 மணியளவில் தேமுதிக நிர்வாகிகளால் ஒலிபெருக்கியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிரசார வாகனம் பழுதடைந்ததால், திருவாரூர் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்படுகிறது. விஜயகாந்தின் வருகை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai