சுடச்சுட

    

    40 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்: வைகோ

    By dn  |   Published on : 25th March 2014 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    25vaiko

    தமிழகத்தில் 40 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விருதுநகர் மக்களவை தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்களை நேரில் சந்தித்து தனக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் செய்ய வந்த அவருக்கு மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வரவேற்பளித்தனர். எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, நகராட்சி சாலை, பஜார் பகுதி, தெப்பக்குளம், காமராஜர் மணிமண்டபம் வரையில் நடைப்பயணமாக சென்று பொதுமக்களையும், வியாபாரிகளையும் சந்தித்து  பிரசாரம் செய்தார்.

    விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வைகோ பேசியதாவது,இத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவார்கள். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. அதனால், 300 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார். அகில இந்திய அளவில் நதிகளை இணைப்பது தொடர்பான பிரச்னை, சிங்கள கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்யும் விவகாரம், ஈழத்தமிழர் பிரச்னை உள்ளிட்டவற்றுக்குத் தீர்வு காணப்படும்.

     இத் தொகுதியில் நான் பல்வேறு நலத் திட்டங்களைச் செய்துள்ளேன். மஞ்சள்காமலை தடுப்பு முகாம் நடத்தி 67 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசியும், மாற்றுத் திறனாளிகளுக்கு 27 மருத்துவ சிகிச்சை முகாம்களையும் நடத்தியுள்ளேன். விருதுநகர் காமராஜர் மணிமண்டபம் அமைய அனுமதி பெற்று தந்ததோடு, டி.எம்.பி வங்கியை மீட்டுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தேன் என வைகோ தெரிவித்தார்.

      மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எம்.எஸ்.சண்முகசுந்தரம், பா.ஜ.க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, தேமுதிக மாவட்டச் செயலர் வைரமுனி உள்ளிட்ட  கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai