சுடச்சுட

  

  அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

  By dn  |   Published on : 26th March 2014 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  small_bus

  அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

  ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்கக் கோரிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, அதிமுகவின் பொதுச் செயலர் ஜெயலலிதா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

  இந்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆஜராகினர். அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி மற்றும் சிறப்பு அரசு வழக்குரைஞர் ஐ.எஸ்.இன்பதுரை ஆஜராகினர்.

  விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் நடத்தும் பணியில் உள்ளது. தமிழகத்துக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

  இந்த நிலையில், திமுக உள்பட பலர் ஸ்மால் பஸ்களில் மனுதாரரின் கட்சி சின்னம் வரையப்பட்டுள்ளது. அதை மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அதிமுகவின் கட்சி சின்னம் போல் ஒத்திருப்பதால் அதை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் கடந்த 10-ஆம் தேதி உத்தரவிட்டது.

  அதிமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகள், "இரட்டை இலை இல்லை' என வாதாடினார்.

  அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அரசிடம் கேட்கவில்லை. அரசு பஸ்களில் வரையப்பட்டுள்ள நான்கு இலை ஓவியம் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவே வரையப்பட்டுள்ளது என வாதாடினார்.

  தேர்தல் ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, பஸ்ஸில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைப்பதற்கு, தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், இது தொடர்பாக மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது. இந்த விஷயம் முழுவதும் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே உள்ளதாகும்.

  பஸ்ஸில் வரையப்பட்டுள்ள இலை ஓவியம், அதிமுகவின் சின்னத்தைப் போல் இருப்பதால் இரண்டுக்கும் இடையே குழப்பம் ஏற்படும். மேலும், வாக்காளர்களின் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என ராஜகோபாலன் வாதாடினார்.

  அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியம் அதிமுகவின் கட்சி சின்னத்தைப் போல் ஒத்திருப்பதால் வாக்காளர்களின் மனதில் அது குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சரியான சந்தேகத்தின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதில், தன்னிச்சையாகவோ அல்லது தேவையில்லாமலோ தேர்தல் ஆணையம் நடந்து கொண்டதாக எங்களுக்குத் தெரியவில்லை.

  அதனால், அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. ஸ்மால் பஸ்களில் இலைகளை அரசு வேண்டுமென்றே வரையவில்லை. தேர்தல் ஆணையம் பிறப்பித்த இந்த உத்தரவு வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது. எனவே இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai