சுடச்சுட

    

    கடலூர், சிதம்பரத்தில் விஜயகாந்த் பிரசாரக் கூட்டம் திடீர் ரத்து

    By dn  |   Published on : 26th March 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijaykanath

    கடலூர், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிரசாரக் கூட்டங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

    விஜயகாந்த் பங்கேற்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரசாரத்துக்கு வரும்போது, வேட்பாளர் இருக்க வேண்டும் என்பதற்காக, அக்கட்சி சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக ஆர்.ராமானுஜம் என்பவரை விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

    வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர் கடலூர், வடலூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் விஜயகாந்த் பங்கேற்பதாக இருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அக்கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான சிவக்கொழுந்து கூறியது: பிரசார வாகனத்தில் பழுது ஏற்பட்டதால், திட்டமிட்டபடி பிரசாரம் செய்ய முடியவில்லை. பிரசாரக் கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும் என்றார். இருப்பினும், வேட்பாளர் தேர்வில் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியால் தான் பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரின் சொந்த ஊர், கடலூர் மாவட்டம் முருகன்குடி என்ற போதிலும், அவர் பல ஆண்டுகளாக சென்னையில்தான் வசித்து வருகிறார்.

    இதனால், கடலூர் மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றும் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததால், வேட்பாளரை மாற்றிவிட்டு பிரசாரம் செய்யலாம் என்று பிரசாரத்தை விஜயகாந்த் ரத்து செய்துள்ளதாக அக்கட்சியைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.

    அகற்றப்பட்ட பந்தல்: விஜயகாந்த் பங்கேற்கும் பிரசாரப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மஞ்சை நகர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் அகற்றப்பட்டது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளும் உடனடியாக அகற்றப்பட்டன. கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு பந்தல் போட்டு, கூட்டம் முடிந்த மறுநாள் அகற்றிவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், போலீஸாரின் அறிவுறுத்தல்படி பந்தல் உடனடியாக அகற்றப்பட்டது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சிதம்பரத்திலும் ரத்து: சிதம்பரம் மேலரத வீதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வேட்பாளர் கி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு விஜயகாந்த் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பிரசாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம், விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு தரப்பினரும், பிரசார வேன் பழுதடைந்துவிட்டது என ஒரு தரப்பினரும், புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை என மற்றொரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

    கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பெரும் செலவு செய்து ஏற்பாடுகளை மேற்கொண்ட தேமுதிக, பாமக, பாஜகவினர் மிகவும் வேதனையடைந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai