Enable Javscript for better performance
தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

  

  தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஜெயலலிதா

  By dn  |   Published on : 26th March 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cm_canvas

  தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்தார்.

  திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.உதயகுமாரை ஆதரித்து, திண்டுக்கல் அங்குவிலாஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:

  கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியால் விலைவாசி உயர்வு, தொழில் வளர்ச்சியில் பின்னடைவு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பொருளாதாரத் தேக்க நிலை, அனைத்து துறையிலும் ஊழல் என மக்கள் விரோதப் போக்கு காணப்படுகிறது. சாமானிய மக்களுக்கு எதிராகச் செயல்பட்ட மத்திய அரசுடன் உறவாடிய திமுக, மக்களின் நன்மை குறித்து சிந்திக்கவில்லை.

  2ஜி அலைக்கற்றை ஊழலில் தமிழகத்துக்கு அவமானத்தை தேடித் தந்த கட்சி திமுக. காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

  தமிழக மக்களுக்காக அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நான் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறேன். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விலையில்லா அரிசி, குறைந்த விலையில் பருப்பு, பாமாயில், பசுமை நுகர்வோர் கடைகளின் மூலம் காய்கறிகள் என பல பொருள்களை வழங்கியதால், தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

  2 முறை மத்திய காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக நலனைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்துவதாக அறிவித்து, ஏமாற்றுகிறார் கருணாநிதி.

  முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்தின் உரிமையை அதிமுகதான் நிலைநாட்டியது.

  பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழக நலனுக்கு எதிரான முடிவுகளை கேரள அரசும், மத்திய காங்கிரஸ் அரசும் எடுத்தபோது குடும்ப நலனை மட்டுமே கருத்தில்கொண்டு திமுக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

  போர் குற்றவாளிகளைத் தண்டிக்கவும், இலங்கையின்மீது பொருளாதாரத் தடை விதிக்கவும், ஐ.நா. சபை மூலம் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கவும், தனி ஈழம் அமைவதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தவும் கருணாநிதி எந்தவித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. ஆனால், இந்த பிரச்னைகளுக்காக 2011ல் ஆட்சிக்கு வந்த பின் அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து கருணாநிதி இதுவரை வாய் திறக்கவில்லை. அமெரிக்கா கொண்டு வந்த உப்புச் சப்பில்லாத தீர்மானத்தை இந்தியா வலுவிழக்க செய்தபோதும், கருணாநிதி மௌனியாகவே இருந்தார். ஆனால், தற்போது ஈழத் தமிழர்களுக்காக உருகுவதுபோல் அவர் பேசிவருவது கேலிக்கூத்தாக உள்ளது.

  மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையையும் மீறி தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. மீனவர் பிரச்னை, கச்சத்தீவு, நிலக்கரி, மண்ணெண்ணெய், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை மாநில அரசினால் மட்டுமே தீர்க்க முடியாது. தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது.

  2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், விமானங்கள் வாங்கியதில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் என எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என செயலிழந்துவிட்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும் என்றார் ஜெயலலிதா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai