Enable Javscript for better performance
தேர்தலில் நட்சத்திர சின்னம் ஒதுக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரத்தில் தங்களுக்கு நட்சத்திர சின்னம் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்த மனுவை மூன்று நாள்களுக்குள் பரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொருளாளர் எம்.முகமது யூசுஃப் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

    எங்கள் கட்சி கடந்த 1999-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அங்கீகாரம் வழங்கப்படாமல் பதிவு செய்யப்பட்டது எங்களது கட்சி. எங்களது கட்சிக் கொடியில் நட்சத்திரம் வரையப்பட்டிருக்கும்.

    கடந்த மக்களவைத் தேர்தலின்போது எங்களுக்கு நட்சத்திர சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அரசியல் கட்சியினர் யாரும் கோராமல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சின்னத்தில் நட்சத்திர சின்னம் ஒதுக்கப்படவில்லை.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மக்களவைத் தேர்தலின்போது எங்களுக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது எங்களுக்கு மெழுகுவர்த்திச் சின்னம் வழங்கப்பட்டது. எங்கள் கட்சிக்கான வாக்கு சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. படிக்காத மக்களுக்கு நட்சத்திர சின்னத்தைப் பார்த்தவுடன் எங்களது கட்சி நினைவுக்கு வரும். இந்தச் சின்னம் வேறு எந்த அரசியல் கட்சியினருக்கும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. அதனால், எங்களுக்கு நட்சத்திர சின்னத்தை ஒதுக்கக் கோரி கடந்த 18-ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தோம். எனவே, எங்களது கட்சிக்கு நட்சத்திர சின்னம் அல்லது அரசியல் கட்சியனர் யாரும் கோராமல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சின்னத்தில் ஒரு சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வேட்பு மனு தாக்கல் தொடங்குவற்கு முன்பு, மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டத்துக்குள்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு: மக்களவைத் தேர்தல் முடியும் வரை பாதுகாப்பு வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணயின்போது, மக்களவைத் தேர்தல் முடியும் வரை மனுதாரர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு தமிழக டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai