சுடச்சுட

    

    தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் கடும் போட்டி: ஞானதேசிகன் மகிழ்ச்சி

    By dn  |   Published on : 26th March 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gnadesigan

    தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி மகிழ்ச்சியளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

    எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராததால் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட சுமார் 1,000-க்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்தனர்.

    தனித்துப் போட்டி என்பதால் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், கே.வீ. தங்கபாலு, எம். கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போட்டியிட மறுத்துவிட்டனர். சொந்த தொகுதியான திண்டுக்கல்லில் தற்போதைய எம்.பி.யான என்.எஸ்.வி. சித்தன் மீண்டும் போட்டியிடுவதால் தான் போட்டியிடவில்லை என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

    மூத்த தலைவர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகினாலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை ஞானதேசிகன் கூறியது:

    தனித்துப் போட்டி என்றதும் காங்கிரஸில் யாருமே தேர்தலில் போட்டியிட முன்வர மாட்டார்கள் என்ற ஒரு தரப்பினர் பிரசாரம் செய்து வந்தனர்.

    ஆனால், காங்கிரஸ் சார்பில் போட்டியிட கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வம் என்னை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மதுரை செல்லும்போது நண்பர் என்ற முறையில் அழகிரியைச் சந்திப்பேன். தேர்தலில் ஆதரவு கேட்டு அவரை சங்கடப்படுத்த மாட்டேன்.

    தமிழக டி.ஜி.பி.யை மாற்ற வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகளை மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது. அரசு இயந்திரம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டும் என்றார் ஞானதேசிகன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai