சுடச்சுட

  

  "தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு ஆதரவில்லை என கருணாநிதி அறிவிக்க வேண்டும்'

  By dn  |   Published on : 26th March 2014 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  p-chidambaram

  தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்பதை திமுக தலைவர் கருணாநிதி அறிவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

  இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக முயன்றால் யார் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள் என்ற கேள்வியை நான் எழுப்பி வருகிறேன். இது குறித்து திமுக தனது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக்கவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுவது எனது கடமையாகிறது.

  திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை (மார்ச் 24) வெளியிட்ட அறிக்கையில், 1999 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக ஏன் கூட்டணி அமைத்தது என்பதற்கு விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். அது ஏற்புடைய விளக்கமாக எனக்குத் தோன்றவில்லை என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  1998 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பாஜக - அதிமுக கூட்டணியை திமுகவும், தமிழ் மாநில காங்கிரஸýம் கடுமையாக எதிர்த்தன.

  பாஜகவின் உண்மையான வலதுசாரி, மதச்சார்பு முகத்தை தமிழக மக்கள் முன்வைத்த மூத்த தலைவர் கருணாநிதி என்பது பசுமையாக நினைவில் உள்ளது.

  அதன் பிறகு அமைந்த பாஜக அரசில் அதிமுக இடம் பெற்றதும், பின்னர் ஆதரவை விலக்கிக் கொண்டு ஆட்சி கவிழ காரணமாக இருந்ததும் உண்மையே.

  மத்தியில் பாஜக அரசு கவிழ்ந்தது திமுகவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அல்லவா அளித்திருக்க வேண்டும்? பாஜக அரசு ஓராண்டில் கவிழ்ந்து விட்டதற்காக திமுக ஏன் கவலைப்பட வேண்டும்? மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸýடன் கூட்டணி அமைத்து மத்தியில் மதச்சார்பற்ற முற்போக்கு அரசு அமைக்க கருணாநிதி முயற்சி எடுத்திருக்க வேண்டும்.

  1999-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இதனை பிற்காலத்தில் திமுக உணர்ந்து கொண்டது. பாஜக ஆட்சியில் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் உயிரிழந்தனர். சிறுபான்மை சமுதாயனத்தினருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தால், அது மீறப்பட்டது என்பதே உண்மை வரலாறு.

  1999-2004-ஆம் ஆண்டு நிகழ்வுகள் ஒருபுறம் இருக்கட்டும். 2014 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

  என் உயரம் எனக்குத் தெரியும் என்று கருணாநிதி அடக்கத்துடன் கூறியதை நடுநிலையாளர்கள் பாராட்டுகிறார்கள். அதனை நானும் வரவேற்கிறேன். ஆனால் அது போதாது.

  பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பதை திங்கள்கிழமை (மார்ச் 24) வெளியிட்ட அறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்தேன்.

  எனவே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முயற்சித்தால், அக்கட்சிக்கு திமுக ஒருபோதும், எந்தச் சூழ்நிலையிலும் ஆதரவு அளிக்காது என்பதை கருணாநிதி அறிவித்தால் மட்டுமே திமுகவின் நிலைப்பாடு தெளிவாகும். மதச்சார்பற்ற முற்போக்கு சிந்தனையுள்ள அரசு மத்தியில் அமைய வேண்டும் என விரும்புபவர்கள் கருணாநிதியிடம் இதனை எதிர்பார்ப்பதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai