சுடச்சுட

  

  புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அனந்தராமனை பாஜக நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரச்னைக்கு இரண்டு நாளில் தீர்வு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் அனந்தராமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் இரு கட்சிகளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குதான் ஒதுக்கப்பட்டுள்ளது என மாநில பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன் கூறியிருந்தார்.

  எழுத்துப்பூர்வமான கடிதம் உள்ளதா-பாமக கேள்வி: இந்நிலையில் பாமக அலுவலகத்தில் வேட்பாளர் அனந்தராமன் செவ்வாய்க்கிழமை கூறியது: நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே உள்ளோம். தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு எழுத்துப் பூர்வமான கடிதங்கள் தரப்பட்டன. ஆனால் புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஒதுக்கப்பட்டது என்பதை வாய்மொழியாகக் கூறினால் ஏற்க முடியாது. எழுத்துப் பூர்வமான கடிதம் உள்ளதா?

  சென்னையில் பேட்டி அளித்த பாஜக தேசிய பொதுச்செயலர் புதுச்சேரி வேட்பாளர் பிரச்னை 2 நாள்களில் முடிவு தெரியும் எனக் கூறியுள்ளார்.

  மாற்றுக் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் யார், யாரை சந்திக்கின்றனர், கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வந்துள்ளனர், யார் ஆதரவு தருகின்றனர் என காவல்துறை அதிகாரிகள் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் அரசு உளவு பார்க்கிறது. இதுகுறித்து தேர்தல் துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக இல்லாதவர்களை மிரட்டுகின்றனர். பணம் தந்து விலைக்கு வாங்குகின்றனர்.

  தேர்தலில் பணிபுரிய விடாமல் பாமகவினருக்கு காவல் துறையினர் நெருக்கடி தருகின்றனர். இந்திய தண்டனைச் சட்டம் 107, 144 பிரிவுகளைப் பயன்படுத்தி எங்கள் தொண்டர்களை முடக்குகின்றனர். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அனுப்புவோம் என்றார்.

  பாஜக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு: பின்னர் பாஜக மாநில நிர்வாகிகள் எம்.விஸ்வேஸ்வரன், ஆர்.வி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் அனந்தராமனை நேரில் சந்தித்தனர். தனியாக அவர்கள் 15 நிமிடங்கள் பேசினர்.

  இதுகுறித்து பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன் கூறியது:

  தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை அனைவரும்

  ஆதரிக்க வலியுறுத்தி கூட்டணி கட்சிகளிடம் கடிதம் தந்து வருகிறோம். அதன்படி பாமக மாநிலச் செயலர் அனந்தராமனிடம் கடிதம் அளித்தோம்.

  2 நாளில் தீர்வு: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்தான் அதிகாரபூர்வ வேட்பாளர். இது இறுதியானது. இப்பிரச்னை குறித்து இரண்டு நாளில் நல்ல தீர்வு ஏற்படும் எனத் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai