சுடச்சுட

  
  alagiri

  எந்த விளக்கமும் கேட்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக, திமுக பொதுச் செயலர் மீது வழக்குத் தொடருவேன் என்று அக் கட்சியின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலரும், மதுரை மக்களவை உறுப்பினருமான மு.க.அழகிரி தெரிவித்தார்.

  இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  என்னை கட்சியில் இருந்து நீக்கியது, திமுக தலைவர் கருணாநிதியால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவரை மிரட்டி, நிர்பந்தப்படுத்தி அறிவிக்க வைத்துள்ளனர். எந்தக் காரணத்தைக் கூறி என்னை நீக்கினார்களோ, அந்தக் காரணத்துக்குரிய நபர், அவருக்கு நெருக்கமான நபர் யார் என்பது எனக்குத் தெரியும்.

  கடந்த ஜனவரியில் கட்சியில் இருந்து தாற்காலிகமாக என்னை நீக்கிவிட்டதாகக் கூறினர். ஆனால் இதுவரை விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதையும் அனுப்பவில்லை. ஆனால் அதிரடியாக என்னை நிரந்தரமாக நீக்கியுள்ளனர்.

  சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதே ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, திமுக தலைவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக உள்ளேன், தந்தையிடம் மகன் மன்னிப்புக் கேட்பதில் என்ன தவறு உள்ளது என்றும் கூறினேன். எனக்கு மீண்டும் தென் மண்டல அமைப்புச் செயலர் பதவியைக் கொடுங்கள் என்று கேட்கவில்லை, கலைக்கப்பட்ட மதுரை மாநகர திமுகவை திரும்ப கொண்டுவந்து பதவி வழங்க வேண்டும் என்று தொண்டர்களுக்காக நியாயம் கேட்டேன். ஆனால், என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர்.

  என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும், நீக்காவிடாலும் நானும் என்னைச் சுற்றியிருப்பவர்களும் என்றுமே தி.மு.க.காரர்கள்தாம். அதை யாராலும் மாற்ற முடியாது.

  கட்சியில் இருந்து நீக்கியதற்காக, அறிவாலயத்தில் இருந்து வெளியே போ என்று கூற முடியாது. அறிவாலயம் எங்கள் சொத்து. அறிவாலயத்தைக் கட்டியதில் எங்களது உழைப்பும் இருக்கிறது.

  கட்சியின் நடவடிக்கைகள், வேட்பாளர்கள், மாவட்டச் செயலர்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினேன். அதற்கு கட்சித் தலைமையிடம் இருந்த பதிலும் இல்லை.

  அப்படியென்றால், அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார்களா?. அவர்களிடம் இதை நீங்கள் கேட்க மாட்டீர்களா? நியாயத்துக்காகத்தான் நான் போராடினேன். எவ்விதக் காரணம் இல்லாமலும், விளக்கம் கேட்காமலும் என்னை நீக்கியதற்காக பொதுச் செயலர் மீது வழக்குத் தொடர உள்ளேன் என்றார்.

  பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

  உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக திமுக தலைமையில் இருந்து சொல்லப்படுகிறதே?

  நோட்டீஸ் அனுப்பியிருந்தால் அதைப் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரம் அவர்களிடம் இருக்கிறதா? நான் கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. உங்களிடம் காட்டுவதற்குத் தயாராக உள்ளேன். தேர்தலுக்குப் பிறகு, யார் கட்சியில் இருக்கப் போகிறார்கள். யார், யாரெல்லாம் கட்சியை விட்டு ஓடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

  வைகோ உடனான சந்திப்புதான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணமா?

  வைகோ பொடாவில் கைதானபோது, திமுக தலைவர் கருணாநிதி பூந்தமல்லிக்குச் சென்று சந்தித்து அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ளவில்லையா?

  பல்வேறு கட்சியினரும் உங்களைச் சந்தித்து ஆதரவு கோரியது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக இருந்ததே?

  வீட்டுக்கு வருபவர்களை வர வேண்டாம் என்றா சொல்ல முடியும்? அவர்கள் என்னிடம் ஆதரவு கேட்டார்கள். நான் யாரையும் ஆதரிப்பதாகச் சொல்லவில்லையே. என்னைச் சந்தித்தபோது வாழ்த்துத் தெரிவித்தேன்.

  திமுக சொத்துகளை அபகரிக்க திட்டமிட்டதாக கூறியதுதான் நீக்கத்துக்கு காரணமா?

  நான் கூறிய குற்றச்சாட்டுகளில் அதுவும் ஒன்று.

  கட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறதே?

  கட்சி எங்களுடையது. பிறகு ஏன் கைப்பற்ற வேண்டும். நானும், என்னைச் சுற்றியிருப்பவர்களும் திமுகவினர்தாம். எப்போதும் போல எனது பணிகளும், சுற்றுப் பயணமும் தொடரும். திமுக தலைவர் பொம்மலாட்ட பொம்மையைப் போல இருக்கிறார். ஆட்டி வைப்பவர்களுக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்கிறார் என்றார் அழகிரி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai