சுடச்சுட

  

  வாகனச் சோதனையின்போது முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள், அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை: பிரவீண்குமார்

  By dn  |   Published on : 26th March 2014 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  praveenkumar

  வாகனச் சோதனையில் ஈடுபடுவோர் மீதான முறைகேட்டுப் புகார்கள் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரித்துள்ளார்.

  மக்களவைத் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான கருத்துப் படங்களை சென்னையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். இதன்பின், செய்தியாளர்களுக்கு பிரவீண்குமார் அளித்த பேட்டி:

  மக்களவைத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சோதனையில் போலியான நபர்கள் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாகனச் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்கள் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சோதனைகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்படுகின்றன.

  வாகனச் சோதனையின்போது பிடிபடும் பணம் தொடர்பாக அலுவலர்கள், காவலர்கள் மீது கூறப்படும் புகார்கள் உண்மையாக இருந்தால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கு தொடரும். சம்பந்தப்பட்டவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்.

  அமைச்சர்களுக்கு பாதுகாப்பு: அமைச்சர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியாற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மாநில காவல் துறையினரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, மத்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அமைச்சர்கள் போன்ற முக்கிய பிரமுகர்களில் யாருக்கு பாதுகாப்புத் தேவை என்பதை ஆராய உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரைக் கொண்ட ஒரு குழு உள்ளது. அந்தக் குழு பரிந்துரைக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

  ஸ்மால் பஸ்களில் இலை ஓவியம்: சென்னை நகரில் இயக்கப்பட்டு வரும் ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியானதே என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஸ்மால் பஸ்களில் உள்ள இலை ஓவியத்தை மறைக்கும்படி போக்குவரத்துத் துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இலை ஓவியத்தை மறைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்தே தொடங்கவிருப்பதாக போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

  வாக்குச் சாவடிகளின் வகைகள்: சிக்கலான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கவே அச்சமாக இருக்கிறது என்றால் அவை பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகள் எனவும், கடந்த தேர்தலில் 90 சதவீதத்துக்கும் மேலாகவும், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு மட்டும் 75 சதவீதத்துக்கும் அதிகமாகவும் வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகள் சிக்கலான வாக்குச் சாவடிகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  அந்த வகையில், தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 400 வாக்குச் சாவடிகள் இனம் காணப்பட்டுள்ளன. மேலும், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. சென்னையில் 287 வாக்குச் சாவடிகளும், விழுப்புரத்தில் 915 வாக்குச் சாவடிகளும் பிரச்னைக்குரிய மற்றும் சிக்கலான வாக்குச் சாவடிகள் என அறியப்பட்டுள்ளன.

  வெப்-கேமிரா மூலம் கண்காணிப்பு: தமிழகத்தில் 20 ஆயிரம் வாக்குச் சாவடிகளை வெப்-கேமிரா மூலம் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் வாக்குச் சாவடிகள் கேமிராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும். வெப்-கேமிரா மூலம் வாக்குச் சாவடியின் நடவடிக்கைகளை படம் பிடிக்கும் பணியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர். இந்தப் பணியில் ஈடுபடும் மாணவர்கள் தமிழக அரசு வழங்கிய இலவச லேப்-டாப்பை பயன்படுத்தக் கூடாது.

  விதிமீறல் தொடர்பான வழக்குகள்: மக்களவைத் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு சுவர்களில் விளம்பரம் செய்தது குறித்து 47 ஆயிரத்து 681 புகார்கள் வந்தன. அதில், 47 ஆயிரத்து 87 இடங்களில் இருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

  தனியார் சுவர்களில் விளம்பரம் செய்தது தொடர்பாக, 31 ஆயிரத்து 124 புகார்கள் பெறப்பட்டன. அதில், 26 ஆயிரத்து 10 இடங்களில் இருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டன. மேலும், அரசு மற்றும் தனியார் சுவர்களில் விளம்பரம் செய்தது குறித்து 589 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் பிரவீண்குமார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai