சுடச்சுட

    

    வாகனச் சோதனை: ரூ. 8 லட்சம் பணத்தை பதுக்கிய 2 எஸ்.ஐ.க்கள் கைது

    By dn  |   Published on : 26th March 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    police

    சேலம் மாவட்டம், வீராணம் அருகே வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.8.25 லட்சத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட காவல் துறை உதவி ஆய்வாளர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    கைதான இருவரையும் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டார்.

    சேலம் மாவட்டம், ஏற்காட்டைச் சேர்ந்த 65 தொழிலாளர்கள் கொடைக்கானல் அருகே மரம் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கான ஊதியம் ரூ.35 லட்சத்தை, முகவர் குப்புசாமியிடம் (37) வழங்குவதற்காக, மரம் வியாபாரி அஜிஸ் திங்கள்கிழமை பிற்பகலில் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார்.

    அவரிடம் ரூ.35 லட்சத்தை குப்புசாமி பெற்றுக் கொண்டு, தனது வேனில் ஓட்டுநர் பாலகிருஷ்ணனுடன் குப்பனூர் வழியாக ஏற்காடு திரும்பிய போது, குப்பனூர் சோதனைச் சாவடியில் வீராணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணி (50), கோவிந்தன் (50), இளைஞர் காவல் படையைச் சேர்ந்த பிரபு ஆகியோர் சோதனையிட்டனர்.

    குப்புசாமியிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த அவர்கள் வீராணம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், தேர்தல் பறக்கும்படையைச் சேர்ந்த அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணனிடம் ரூ.26.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தகவல் கொடுத்தனர்.

    வீராணம் காவல் நிலையம் சென்ற தேர்தல் பறக்கும் படையினர், குப்புசாமியையும், அவர் கொண்டு வந்த பணத்தையும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.

    தாங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, வாகனச் சோதனை நடத்தியதில் இந்தத் தொகையை பறிமுதல் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். அந்தத் தொகையை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் எண்ணிய போது, தான் ரூ.35 லட்சம் கொண்டு வந்ததாகவும், ஆனால், இப்போது ரூ.26.75 லட்சம் மட்டும் இருப்பதாகவும் குப்புசாமி புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து பறக்கும் படையினரிடம் முத்துராமலிங்கம் விசாரித்த போது, வீராணம் போலீஸாரே குப்புசாமியை பணத்துடன் பிடித்து தங்களிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தனர். குப்புசாமி கொண்டு வந்த தொகையில் ரூ.8.25 லட்சம் காணாமல் போனது குறித்து மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஏ.அமல்ராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, சேலம் மாவட்ட எஸ்.பி. சக்திவேல், ஏ.எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் விசாரணை நடத்தியதில், உதவி ஆய்வாளர்கள் கோவிந்தன், சுப்பிரமணி இருவரும், குப்புசாமி இரு பைகளில் கொண்டு வந்திருந்த தொகையில் ஒரு பையில் இருந்த ரூ.8.25 லட்சத்தை தங்களுக்குள் பங்கிட்டு கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து, வீராணம் காவல் நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள ரூ.4.25 லட்சம் குறித்து, காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு உதவி ஆய்வாளர், இளைஞர் படையைச் சேர்ந்த பிரபு ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது. உதவி ஆய்வாளர்கள் கோவிந்தன், சுப்பிரமணி இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 379 (திருட்டு), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட இருவரும் சேலம் 4-ஆவது நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமியின் வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான இருவரையும் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. அமல்ராஜ் உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai