சுடச்சுட

    
    tkrangarajan

    இடதுசாரிகளுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதற்காக, தேர்தலுக்குப் பிறகு அதிமுக வருந்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க உள்ள பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் கட்சியின் மதுரை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் கட்சியின் டி.கே.ரங்கராஜன் பேசியது:

    கடந்த 9 ஆண்டுகால காங்கிரஸ் அரசில் திமுகவும் அங்கம் வகித்தது. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. சாகுபடி பரப்பு குறைந்து, விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகை காரணமாக பல்வேறு அரசுடமை வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. வாராக் கடன்களை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், மேலும் புதிய வங்கிகளை நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

    மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்தக் கூடிய அரசாகவே இருந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்றுக் கொள்கைகள் உடைய அரசு அமைவதற்கான இடதுசாரிகளின் நிலைப்பாட்டுக்கு மக்களிடம் ஆதரவு கேட்க வேண்டும்.

    இடதுசாரிகளைப் புறக்கணித்துவிட்டு எந்தக் கட்சியும் வெற்றிபெற முடியாது. நம்மை பகைத்து கொள்ளும் கட்சிகளுக்கு சவாலாகவே கூறுகிறேன். கூட்டணியை முறித்துக் கொண்டதற்காக, தேர்தலுக்குப் பிறகு அதிமுக கவலைப்படப் போகிறது. 1998 இல் இதே நிலையைத்தான் திமுக எடுத்தது. இதனால் மதுரை, சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அந்த தேர்தலுக்குப் பிறகு, தவறு செய்துவிட்டதாக கருணாநிதியே கூறினார். அந்த நிலை மீண்டும் வரும்.

    இப்போது மோடி அலை வீசுவதாகக் கூறுகிறார்கள். தமிழக நலன் காப்பதற்கும், தமிழக மீனவர்கள் நலன் காப்பதற்கும் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்கிறார்கள். ஆனால், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்றுள்ளது. அவர்களை இன்னும் மீட்க முடியவில்லை. இப்படியிருக்க, தமிழக மீனவர்களை அவர் காக்கப் போகிறார் என்கிறார்கள் என்றார் டி.கே.ரங்கராஜன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai