காங்கிரஸ் எம்.பி. கண்ணனுடன் முதல்வர் ரங்கசாமி ரகசிய சந்திப்பு
By dn | Published on : 27th March 2014 02:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
காங்கிரஸ் எம்.பி. கண்ணனை முதல்வர் ரங்கசாமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக செவ்வாய்க்கிழமை காலை ரகசியமாக சந்தித்துப் பேசினார். இது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக கண்ணன் பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கண்ணன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் காங்கிரஸýக்கு ஆதரவு அளித்தார். பின்னர் தனது புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தார். இதனால் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்ணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியத்திடம் கடிதமும் அளித்துள்ளனர்.
இதனிடையே, என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் கண்ணனை சில நாள்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வர் ரங்கசாமி விரைவில் கண்ணனை சந்தித்துப் பேசுவார் என ராதாகிருஷ்ணன் உறுதி கூறியிருந்தார்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை தனியார் ஓட்டல் ஒன்றில் கண்ணனை முதல்வர் ரங்கசாமி தனியாக வந்து சந்தித்தார். இச்சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது.
அப்போது கண்ணன், என்.ஆர்.காங்கிரசுக்கு தனது ஆதரவாளர்கள் ஆதரவு தர வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை விதித்தாராம்.
இந்த நிபந்தனைகள் குறித்து தனது கட்சி பிரமுகர்களுடன் ஆலோசித்துவிட்டு பின்னர் முடிவை தெரிவிப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.