சுடச்சுட

    

    சல்லிக்காசு கூட லஞ்சம் வாங்கியது கிடையாது: ப.சிதம்பரம்

    By dn  |   Published on : 27th March 2014 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chidambaram_canvas1

    நான் சல்லிக்காசு கூட லஞ்சம் வாங்கியது கிடையாது. எனக்கு கடவுள் கொடுத்தது நிறைய இருக்கிறது என்றார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

    சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல், கட்டுக்குடிப்பட்டி, புழுதிபட்டி ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

    நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை குறைத்து மதிப்பிடவில்லை. தேர்தலில் எங்களது சவால் பா.ஜ.க மட்டுமே.

    10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அதற்கு முன்பு 6 ஆண்டுகள் பா.ஜ.க நாட்டை ஆண்டது. அதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

    6 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் விவசாயக் கடனை ஏன் ரத்து செய்யவில்லை. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை. மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க ஏன் முன்வரவில்லை.

    காங்கிரஸ் ஆட்சியில் 27 லட்சம் மாணவர்களுக்கு ரூ.55 ஆயிரம் கோடி கல்விக்கடன் தந்துள்ளோம். நாட்டின் செங்கோல் ஒரு பக்கமாக சாய்வது தவறல்ல. ஆனால், அது ஏழையின் பக்கமாக இருக்க வேண்டுமே தவிர, பணக்காரர்களின் பக்கம் இருக்கக் கூடாது.

    காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தால் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும். ஆனால், இதுவரை பா.ஜ.க 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடரும் என வாக்குறுதி அளிக்கவில்லை.

    எனக்கு ஒதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.19 கோடியை முறையாகச் செலவழித்து அதை நோட்டீசாக அச்சடித்து உங்களிடம் வழங்கியுள்ளேன். அதில் ஏதாவது தவறு இருந்தால், அடுத்த முறை நான் இங்கு வரும்போது என் தலைமீது நீங்கள் குட்டு வைக்கலாம்.

    அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும். சிவகங்கை பகுதிக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன்.

    தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வேர் கிடையாது.

    தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மத்திய உள்துறை, நிதித் துறை அமைச்சர் பதவி கிடைத்தது எனக்கு பெருமை கிடையாது. அது தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன் என்றார் சிதம்பரம்.

    வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், மற்ற கட்சி வேட்பாளர்களைவிட நான் தகுதியானவனே. ஏனென்றால் வெளி உலகம் தெரியும். ஆங்கிலத்தில் சிறப்பாக பேச முடியும். அரசுத் திட்டங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிடமும் பேசி பல தொழிற்சாலைகளை இங்கு கொண்டு வர முயற்சி செய்வேன் என்றார் அவர்.

    பிரசாரத்தின்போது மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, வட்டாரத் தலைவர் ரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, ராமசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai