Enable Javscript for better performance
செய்வீர்களா...? செய்வீர்களா...? ஜெயலலிதாவைப் போல கேள்வி கேட்டு மு.க.ஸ்டாலின் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    செய்வீர்களா...? செய்வீர்களா...? ஜெயலலிதாவைப் போல கேள்வி கேட்டு மு.க.ஸ்டாலின் பிரசாரம்

    By dn  |   Published on : 27th March 2014 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin_canvas2

    ஜெயலலிதாவைப் போல "செய்வீர்களா...? செய்வீர்களா...?' என்று கேள்வி கேட்டு திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டைப் பகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியது:

    திமுக தலைவர் மு.கருணாநிதி சுட்டிக் காட்டும் நபரே அடுத்த பிரதமர் என்ற நிலையை உருவாக்கும் வகையில் மக்களின் எழுச்சியைக் காண முடிகிறது.

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல தேர்தலின்போது மட்டும் மக்களைத் தேடி வருபவர் கருணாநிதி அல்ல. அதுவும் தமிழக முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து வந்து மக்களை சந்திக்கிறார். சாலை வழியாக பயணித்தால் அவரது ஆட்சியில் சாலைகளின் நிலைமை பற்றித் தெரியும்.

    தமிழக முதல்வர் பிரசாரக் கூட்டங்களில் கேட்பது போல நானும் கேட்கிறேன், தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா...? என்றார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் "செய்வோம்' என்று கத்தினர்.

    நான் ஆட்சிக்கு வந்தால் தடையற்ற மின்தடை வரும் என்று சொல்லி ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்குமேல் மின்தடையை செய்யும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா...? என்று மீண்டும் ஸ்டாலின் கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் செய்வோம் என்று கத்தினர்.

    ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா?, வெற்றி பெற செய்வீர்களா? என மீண்டும் மீண்டும் மு.க.ஸ்டாலின் கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் "செய்வோம், செய்வோம்' என்று கூறினர்.

    திருத்தணி: திருத்தணி-அரக்கோணம் சாலை சந்திப்பு அருகில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கடந்த, 2006-11-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திருத்தணியில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், ரத்த வங்கி, அறுவை சிகிச்சை மையம், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் போன்ற அலுவலகங்கள் கட்டப்பட்டன.

    திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையை 50 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது என்றார்.

    பொன்னேரி: பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, எந்தச் சூழ்நிலையிலும் மக்களோடு இணைந்திருப்பது திமுக இயக்கம்.

    திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, மேலூர் கூட்டு குடிநீர் திட்டம், பழவேற்காட்டில் சுனாமி திட்டத்தில் 1,190 கான்கிரீட் வீடுகள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம், பழவேற்காடு பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்குள்ள ஏரியில் மேம்பாலம் அமைத்தது உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் கடந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என பேசினார்.

    ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பேசிய மு.க.ஸ்டாலின், பஸ் கட்டணம், பால் விலை உயர்வு மற்றும் அத்தியவசியப் பொருள்களின் விலையும் விண்ணைமுட்டும் வகையில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்காமல் பல சாதனைகளை செய்துள்ளதாக ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai