சுடச்சுட

    
    alagiri1

    "தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை. என் கட்சி திமுக. விரைவில் திமுகவை மீட்பேன்' என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி திட்டவட்டமாகக் கூறினார்.

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள ஆதரவாளர்களை சந்திக்க அழகிரி புதன்கிழமை வருகை தந்தார். அப்போது ஆரணியில் மூத்த திமுக பிரமுகர் எம்.கே.ஏழுமலை (82) என்பவரை சந்தித்துப் பேசினார்.

    பின்னர் தனது ஆதரவாளர்களான எம்.கே.இ.முருகன், ஆர்.எஸ்.சிவக்குமார், சைதை கார்த்திக், ஆர்.தினகரன், சைதை மா.முருகன், வி.கே.பரத், எஸ்.கோபி உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி கூறியதாவது: கட்சியை விட்டு என்னை நீக்கியது சம்பந்தமாக வழக்குத் தொடருவேன். முறையாக நோட்டீஸ் அனுப்பாமல் என்னை நீக்கியுள்ளனர்.

    நோட்டீஸ் அனுப்பியதாக தலைவர் கருணாநிதியிடம் பொய் கூறி என்னை நீக்கியுள்ளனர். வேண்டுமென்றே திமுகவில் இருந்து என்னை நீக்கியுள்ளனர். என் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைவர் கருணாநிதியிடம் கூறியவர்கள் 2 மாதத்துக்குள் வெளியேறுவார்கள். அவர்களிடமிருந்து திமுகவை மீட்டெடுப்பேன்.

    "திமுகவிலிருந்து எம்ஜிஆர், வைகோ ஆகியோர் நீக்கப்பட்டது போல் உங்களையும் நீக்கியுள்ளனர். அவர்களைப்போல நீங்களும் தனிக் கட்சி தொடங்குவீர்களா?'

    என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் ஏன் தனிக் கட்சி தொடங்க வேண்டும்? என் கட்சி திமுக. நான் எம்ஜிஆர் அல்ல. நான் தனிக் கட்சி தொடங்கப் போவதில்லை' என்றார்.

    "அப்படியானால் திமுகவுக்குத்தான் ஆதரவா?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "யாருக்கு ஆதரவு என்று என்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்தாலோசனை செய்து பிறகு அறிவிப்பேன்' என்றார் அழகிரி.

    "ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.சிவானந்தத்துக்கு ஆதரவு தருவீர்களா?' என்று கேட்டதற்கு பேட்டியை முடித்துக்கொண்டு வேகமாக எழுந்து சென்றுவிட்டார்.

    மு.க.அழகிரி வருகையையொட்டி எம்.கே.ஏழுமலை வீட்டின் முன்பு சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். மேலும் இவரது ஆதரவாளர்கள் ஆரணி எல்லையிலிருந்து 20-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து வர வரவேற்பு கொடுத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்ட மதிமுக செயலர் ஆரணி டி.ராஜா, நகரச் செயலர் எஸ்.கே.ரத்தினகுமார் மற்றும் திமுகவைச் சேர்ந்த தேவிகாபுரம் சகாயம், போளூர் சவரன் கருணாநிதி உள்ளிட்டோர் மு.க.அழகிரியைச் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai