Enable Javscript for better performance
தன்மானத்தை அடகுவைத்தவர் ராமதாஸ்: வேல்முருகன் தாக்கு- Dinamani

சுடச்சுட

    
    Velmurugan

    சிங்கம், சிறுநரிகள் என்றெல்லாம் வர்ணித்துவிட்டு சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் 2 கோடி வன்னியர்களின் தன்மானத்தை விஜயகாந்தின் காலடியில் அடகு வைத்து, ராமதாஸ் அமைத்து இருப்பது வெற்றிக் கூட்டணி அல்ல; அவர்களாகவே ஒருவரை ஒருவர் வீழ்த்தி, வீழ்ந்து கிடக்கப்போகும் கூட்டணி என்று தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் டி.வேல்முருகன் கூறினார்.

    தாம்பரத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

    காவிரி நதிநீர் பிரச்னையில் கருணாநிதியால் செய்ய முடியாத சாதனையை மத்திய அரசிதழில் வெளியிட வைத்து சாதனை படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா.

    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்க முயன்ற கேரள அரசைத் தடுத்து தட்டிக் கேட்டவர். தமிழகத்தின் நலனுக்காக தில்லியில் பிரதமர் கூட்டிய கூட்டத்தில் தனது மாநில மக்களின் தேவைக்கான கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்கக் கூட அவகாசம் அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தவர் ஜெயலலிதா.

    கூடங்குளம் அணுஉலை விவகாரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்திலும், இலங்கையில் தனி ஈழம் தொடர்பான விவகாரத்திலும் பாஜக ஆதரவு அளிக்க முன் வராத நிலையில் சீட்டுக்காக பாஜகவுடன் சேர்ந்து சேற்றைப் பூசிக் கொண்டு இருக்கிறார் வைகோ.

    தமிழ்நாட்டில் 5 வன்னியர்களை அமைச்சர்களாக்கி பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா. தமிழகத்தின் நலனுக்காக செயல்பட்டு வரும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன், பல்லாவரம் எம்.எல்.ஏ. தன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai