தமிழகத்தில் மாறுதலுக்கான புதிய அத்தியாயம் தொடக்கம்: எச்.ராஜா
By dn | Published on : 27th March 2014 02:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தமிழகத்தில் மாறுதலுக்கான புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.
கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எச்.ராஜா பேசியது:
கடந்த 1967-ஆம் ஆண்டுக்குப்பின் தமிழகத்தில் இப்போதுதான் மக்களவைத் தேர்தலுக்கு மகத்தான கூட்டணி அமைந்துள்ளது. நாடு முழுவதும் இப்போது மோடி அலை வீசுகிறது. பாஜகவின் சின்னமான தாமரையை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தால் வெற்றி என்ற நிலை உள்ளது.கடந்த 2009-இல் இப்போது பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெற்ற வாக்குகளைச் சேர்த்தால் 25 சதவீதம், மோடி அலைக்காக 15 சதவீதம் ஆக மொத்தம் 40 சதவீத வாக்குகள் கிடைப்பது உறுதி. தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையை பாஜக கூட்டணி உருவாக்கியுள்ளது.
பாஜக மத்தியில் ஆண்ட 6 ஆண்டுகளில் 6.80 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. செயல்படாத பிரதமர் ஒருவர் 10 ஆண்டுகளாக அப்பதவியில் தொடர்கிறார். குஜராத்தைப் பொறுத்தவரையில் தினமும் மாலை 4 மணிக்குள் பெறப்படும் ஜாதி, வருமானச் சான்றிதழ்களின் விண்ணப்பங்கள் மீது அன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்.
விவசாய மின் இணைப்புக்கு தமிழகத்தில் காத்திருக்க வேண்டும். ஆனால் குஜராத்தில் 24 மணி நேரத்துக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது என்றார் எச்.ராஜா.
வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேமுதிக மாவட்டச் செயலர்கள் பாண்டியன், தமிழ்முருகன், மதிமுக மாநில இளைஞர் அணிச் செயலர் வே.ஈஸ்வரன், மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார், புறநகர் மாவட்டச் செயலர் குகன் மில் செந்தில் உள்ளிட்டோர் பேசினர்.