Enable Javscript for better performance
தி.க.சி. உடல் தகனம்: பழ. நெடுமாறன், ஆர். நல்லகண்ணு நேரில் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

  

  தி.க.சி. உடல் தகனம்: பழ. நெடுமாறன், ஆர். நல்லகண்ணு நேரில் அஞ்சலி

  By dn  |   Published on : 27th March 2014 11:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thikasi

  மூத்த எழுத்தாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான தி.க.சிவசங்கரனின் உடல் வியாழக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

  தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு இறந்த அவரது உடல், திருநெல்வேலி நகரம், சுடலைமாடன் தெருவில் அவரது வீட்டில் கடந்த 2 நாள்களாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

  புதன்கிழமை காலை முதல் மாலைவரை எழுத்தாளர்கள், படைப்பாளிகள், அரசியல் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

  2-ஆவது நாளாக வியாழக்கிழமை காலையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

  மாலையில், உலகத் தமிழர் பேரியக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் கூறும்போது, "புதிய படைப்பாளிகள் பலரை உருவாக்கிய பெருமை தி.க.சி.யைச் சேரும். தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம், மார்க்சியம் ஆகிய பஞ்சசீலக் கொள்கைகளை அவர் எழுத்திலும், பேச்சிலும் கடைப்பிடித்தார். தமிழ்த் தேசியவாதியாகவும், மார்க்சியவாதியாகவும் திகழ்ந்தார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது' என்றார்.

  தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் வழக்குரைஞர் த. ஸ்டாலின் குணசேகரன், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பொ. லிங்கம், சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான், சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன், எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், மனோ, கீதா பச்சையப்பன், கலாப்ரியா, பேராசிரியர் அறிவரசன், ஏஐடியூசி மாநிலச் செயலர் காசிவிஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சண்முகவேல், மாவட்டப் பொருளாளர் சத்தியன், மதிமுகவைச் சேர்ந்த குட்டி என்ற சண்முகசுந்தரம், திமுக மாநகர பொறுப்பாளர் அப்துல்வகாப், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தேவதாசசுந்தரம், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சித் தலைவர் பெ. மணியரசன், கி. வெங்கட்ராமன், பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்கச் செயலர் நம்பி, கண்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன், பா.ரா. வெங்கடாசலம், சா. பீட்டர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

  பின்னர், அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருநெல்வேலி கருப்பந்துறையில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai