சுடச்சுட

    
    dead

    மறைந்த மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி விருது பெற்ற இலக்கியத் திறனாய்வாளருமான தி.க.சி.யின் உடலுக்கு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. தனது 89ஆவது வயதில் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவரது உடல் திருநெல்வேலி, மேலரத வீதி சுடலைமாடன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தினமணி ஆசிரியர்: தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், பேராசிரியர் எஸ்.தோதாத்ரி ஆகியோர் புதன்கிழமை காலை நேரில் வந்து, தி.க.சி. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    வைகோ: மதிமுக பொதுச்செயலர் தனது கட்சியினருடன் புதன்கிழமை பிற்பகல் நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, தி.க.சி.யின் மகன்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தி.க.சி. தனது 90ஆவது வயதின் வாசலில் மறைந்துள்ளார். தமிழ் ஈழ விடுதலைக்கு தன் எழுத்தையும், பேச்சையும் அர்ப்பணித்தவராகவே வாழ்ந்தார். எனக்கு அறிவுரையும் ஆறுதலும் வழங்கி வந்த ஒரு மூத்த அறிஞரை இழந்துவிட்டேன்' என்றார்.

    அவருடன் மாவட்டச் செயலர் பெருமாள், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், மின்னல் முகமதுஅலி, பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலர் வியனரசு உள்ளிட்டோரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    கம்யூனிஸ்ட் கட்சியினர்: மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பழனி, கருணாநிதி, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் உச்சிமாகாளி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காசி விஸ்வநாதன் அஞ்சலி செலுத்தினார்.

    பேராசிரியர்கள் தொ.பரமசிவன், மாணிக்கம், அழகேசன், சோமசுந்தரம், நீலகண்டன், கருப்பையா, முத்துலட்சுமி, ராமச்சந்திரன், இருதயராஜா, எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாசம், திலகபாமா, கவிஞர்கள் குமாரசுப்பிரமணியன், சக்தி ஜோதி, திமுக எம்எல்ஏ டி.பி.எம். மைதீன்கான் மற்றும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    வியாழக்கிழமை மாலை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai