சுடச்சுட

  

  ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வாதம்

  By dn  |   Published on : 27th March 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court_of_India

  பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

  "சட்டத்துக்குள்பட்டே ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தமிழக அரசும், "சிபிஐ விசாரித்த வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் தன்னிச்சையாக விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' என மத்திய அரசும் நீதிமன்றத்தில் வாதிட்டன.

  இதையடுத்து, இரு தரப்பு வாதங்களை வியாழக்கிழமையும் தொடருவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து விசாரணையை ஒத்திவைத்தது.

  முன்னதாக, மத்திய அரசும், தமிழக அரசும் தாக்கல் செய்திருந்த மனுக்களை தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரித்தது.

  மத்திய அரசு எதிர்ப்பு: அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் குலாம் இ. வாகனவதி முன்வைத்த வாதம்: "ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசுக்கு அதில் எவ்வித அதிகாரமும் கிடையாது. எத்தனையோ ஆயுள் தண்டனை கைதிகள் தமிழக சிறைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட ஏழு பேரும் தங்களை விடுதலை செய்யக் கோரி விண்ணப்பிக்காத நிலையில், அவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதுமட்டுமின்றி இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ஆவது பிரிவின் கீழ், சிபிஐ வழக்குகளில் தண்டனை பெறும் கைதிகளை விடுவிக்கும் முடிவை மத்திய அரசுடன் கலந்து பேசாமல் மாநில அரசு எடுக்க முடியாது. இந்த வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஆட்சேபிக்கவில்லை. அவர்களை தன்னிச்சையாக விடுவிக்கும் தமிழக அரசின் நிலையைத்தான் எதிர்க்கிறோம்' என்று வாகனவதி வாதிட்டார்.

  மாநிலத்துக்கு அதிகாரம் உண்டு: இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி முன்வைத்த வாதம்: "2008-ஆம் ஆண்டில் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தது. ஆனால், தற்போது அந்த இயக்கம் ஒடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு.

  22 ஆண்டுகளாக சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகளுக்கு பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் சட்டம், வெடிமருந்துகள், ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின்படியே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் அவர்கள் சிறையில் நீண்ட காலமாக உள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றமும் ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் எனத் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகவே, மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று ராகேஷ் திரிவேதி வாதிட்டார்.

  இதையடுத்து, இரு தரப்பினரின் வாதம் வியாழக்கிழமை முடிவடைந்தவுடன் ஆயுள் சிறை கைதி பேரறிவாளன் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி வாதத்தை முன்வைக்க அனுமதி அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

  பின்னணி: முன்னதாக, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  அப்போது, மூவரையும் விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி ஏற்கெனவே இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்தது.

  இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai