வறண்ட நிலையில் பூண்டி ஏரி
By dn | Published on : 27th March 2014 04:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து தண்ணீரை திறந்துவிடக் கோரி தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களாக விளங்கி வரும் ஏரிகளில் பூண்டி ஏரியும் ஒன்று.
இங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு, வரலாறுக் காணாத அளவுக்கு பூண்டி ஏரி வறண்டது. மொத்தமுள்ள 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவுக் கொண்ட இந்த ஏரியில் 240 மில்லியன் கன அடி அளவுக்கு நீர் இருப்பு குறைந்தது. இதையடுத்து தமிழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஜனவரி 10-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு இதுவரை 1.20 டி.எம்.சி. தண்ணீர் வரை வந்ததாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது புழல் ஏரியில் 2 ஆயிரத்து 248 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆனால் சோழவரம் ஏரியில் 63 மில்லியன் கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 808 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது.
ஆனால் பூண்டி ஏரியில் வெறும் 128 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு தற்போது நீர்வரத்து ஏதும் இல்லை. ஆனால் பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக தற்போது 138 அடி தண்ணீர், சென்னை குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.
தற்போதுள்ள நீர்மட்டம் தொடர்ந்து சென்னைக் குடிநீருக்கு உபயோகப்படுத்தப்பட்டால் இன்னும் சில வாரங்களிலேயே பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இதையொட்டி ஆந்திர மாநில அதிகாரிகளிடம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிடும்படி தீவிர பேச்சுவார்த்தையில் தமிழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.