சுடச்சுட

  

  சட்டப் பேரவைத் தேர்தலின் முடிவில் அதிமுகவை புறக்கணித்துவிட்டு சுயேச்சை ஆதரவுடன் ஆட்சியமைத்து துரோகம் இழைத்தவர் ரங்கசாமி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.

  புதுச்சேரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து உப்பளம் துறைமுக மைதானத்தில் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசியது:

  இந்திய பொருளாதாரத்தைச் சீரழித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். ஊழல், கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் உங்கள் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும்.

  துரோகம் இழைத்த ரங்கசாமி: கடந்த 2011-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நான் கோரினேன். அதன்படி நீங்கள் வாக்களித்தீர்கள். அதிமுக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை மகத்தான வெற்றிபெறச் செய்தீர்கள். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெறவில்லை.அதிமுகவை புறக்கணித்துவிட்டு சுயேச்சை ஆதரவுடன் ஆட்சியமைத்தார் ரங்கசாமி. அவர் அதிமுகவுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உங்களுக்கும் துரோகம் இழைத்து விட்டார்.

  தமிழகத் திட்டங்கள் புதுவைக்கு கிடைக்கவில்லை: அதிமுக ஆதரவுடன் புதுச்சேரியில் ஆட்சி அமைந்திருந்தால் தமிழகத்தில் வழங்கப்படும் திட்டங்களான தாலிக்குத் தங்கம், விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், பசுக்கள், ஆடு வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் திட்டம் என எண்ணற்றத் திட்டங்கள் உங்களை வந்தடைந்திருக்கும்.

  காரைக்கால் மீனவர்களுக்கு குரல்கொடுக்காத அரசு: புதுவையில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. உள்கட்டமைப்பு சீரமைக்கப்பட வில்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போது என்.ஆர்.காங்கிரஸ் அரசு ஏதாவது குரல் கொடுத்துள்ளதா? தமிழகத்தில் மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்படும்போது நான் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டேன். தமிழக மீனவர்கள் விடுதலையாகும்போது காரைக்கால் மீனவர்களும் எனது முயற்சியால் விடுதலையாகி வருகின்றனர்.

  புதுச்சேரிக்கு, கடந்த 2012-13-ல் திட்ட செலவினங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய திட்டக்குழு அனுமதித்தது. நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே திட்டக்குழு அனுமதித்துள்ளது.

  கடந்த ஆண்டைவிட 33 சதவீத நிதி குறைவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது. பல பிரச்னைகளில் புதுச்சேரி மக்களின் உணர்வை மத்திய அரசிடம் எடுத்துக்கூறத் தவறியது என்.ஆர் காங்கிரஸ் அரசு.

  அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜிப்மரில் 5 ஆண்டுக்கு முன்பு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வருமான உச்சவரம்பை ஜிப்மர் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. இதனால் ஏழைகள் அவதிப்படுகின்றனர். இதைக் கண்டித்து அதிமுகதான் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இருப்பினும் இதை கைவிட காங்கிரஸ் முன்வரவில்லை.

  என்.ஆர்.காங்கிரஸ் அரசும் கண்டுகொள்ளவில்லை. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு புகுத்தப்பட்டதற்கு என்.ஆர்.காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு திமுகவும் ஆதரவு அளித்தது.

  புதுவை முன்னேற முயற்சிக்காத நாராயணசாமி: புதுச்சேரியை சேர்ந்த நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தும் தொழில் வளர்ச்சியில் புதுச்சேரி எந்த முன்னேற்றமும் காணவில்லை. நலிந்த ஆலைகளை நவீனப்படுத்தவும், மூடிய ஆலைகளை திறக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் நாராயணசாமி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத்தர எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. நீண்டகாலக் கடனை தள்ளுபடி செய்யவில்லை. மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யவில்லை. திண்டிவனம், கடலூருக்கு ரயில் பாதை அமைத்துத் தரவில்லை. துறைமுக அபிவிருத்தி திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றைக் கொண்டு வர முயற்சிக்கவில்லை. சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரயில் பாதை அமைய நடவடிக்கை எடுக்கவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும் எதையும் பெற்றுத்தர இயலாத கட்சி காங்கிரஸ் கட்சி.

  ஒடிஸாவில் நிலக்கரி எடுக்க அனுமதி வழங்கியதில் நியாயமாக செயல்பட்டிருந்தால் புதுச் சேரி வளர்ச்சி பெற்றிருக்கும். அதை செய்யத் தவறிய காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸýக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும். இந்த கட்சிகளை வீழ்த்துவது நம் ஜனநாயகக் கடமை.

  புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 1998-ல் பா.ஜ.க. ஆட்சியின் போது வலியுறுத்தப்பட்டது. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பத்திரிகையிலும் அந்த செய்தி வெளிவந்தது. ஆனால் பின்னர் வந்த ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

  மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால், புதுச்சேரி மாநில மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்.

  அனைத்து பிராந்தியங்களும் சம வளர்ச்சி பெறவும், ரூ.5 ஆயிரம் கோடி மத்திய கடனை ரத்து செய்யவும், மத்திய வரி வருவாயை புதுச்சேரிக்கு தனியாக பிரித்து வழங்கவும், நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்கவும், விமானநிலையத்தை நவீனப்படுத்தவும், தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கவும், ஆலைகளை நவீனப்படுத்தவும், நெசவாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கவும், பிரெஞ்சு கட்டடங்களை புதுப்பிக்கவும், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கவும், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்லவும், ஏற்றுமதியை உருவாக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தவும், மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  தமிழை ஆட்சிமொழியாக்கவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கவும், நாட்டின் பல்வேறு ஊழல்களுக்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரவும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றவும், தனி நபர் வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சம் ஆகவும் அதிமுக மத்தியில் அங்கம் வகிக்க வேண்டும்.

  தமிழக, புதுச்சேரி மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு அமைதி, வளம், வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்றார் ஜெயலலிதா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai