Enable Javscript for better performance
ராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

    By dn  |   Published on : 28th March 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    navyban

    ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, மற்றவர்களை குழாய், கற்களால் தாக்கியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் விரட்டியடித்தனர்.

    ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலை 536 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத் தீவு, தலைமன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு படகில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் படகில் மோதி அதை கடலில் மூழ்கடித்துள்ளனர். பின்னர், அந்தப் படகிலிருந்த அந்தோனி உள்ளிட்ட 5 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

    மேலும், அப் பகுதியின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரவீண், பால்பாண்டி, தேவசகாயம், நம்புரெத்தினம் ஆகியோரின் படகுகளில் சென்ற பிரபா உள்பட 19 மீனவர்களை சிறைபிடித்தனர். மொத்தம் 24 மீனவர்களை கைது செய்யப்பட்டனர்.

    பின்னர், இவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, ராஜேந்திரனின் படகில் கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களையும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதிபதிகள் 5 மீனவர்களையும் ஏப்ரல் 8ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும், சிறை பிடிக்கப்பட்ட 19 மீனவர்களை மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    துப்பாக்கிச் சூடு: இதற்கிடையே, அதே பகுதியில் இலங்கை கடற்படையின் மற்றொரு பிரிவினர் ராமேசுவரம் மீனவர்களின் 200-க்கும் மேற்பட்ட படகுகளைச் சுற்றி வளைத்துள்ளனர். அங்கிருந்து தப்பியோடும்படி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டு எச்சரிக்கை விடுத்து விரட்டியடித்தனர். பயந்த மீனவர்கள் அவசரத்தில் படகுகளைத் திருப்பியபோது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த ராபர்ட் மகன் ரெனிக்கு (30) இடது காலில் 4 விரல்கள் துண்டிக்கப்பட்டன.

    காயமடைந்த மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை வெட்டிவிட்டு வியாழக்கிழமை அதிகாலை குறைந்த மீன்களோடு ராமேசுவரம் வந்து சேர்ந்தனர். விரல் துண்டிக்கப்பட்ட மீனவர் ரெனி மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai