சுடச்சுட

    

    அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைதான 35 பேருக்கு ஏப். 11 வரை காவல் நீட்டிப்பு

    By dn  |   Published on : 29th March 2014 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    delegate_arrest

    அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைதான 35 பேருக்கும் ஏப்ரல் 11-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து வெள்ளிக்கிழமை தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி தூத்துக்குடி அருகே சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 12 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், வெளிநாட்டைச் சேர்ந்த 23 பேர் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், காவல் நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த 23 பேரும் வெள்ளிக்கிழமை முதலாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்காக, பலத்த பாதுகாப்புடன் அவர்கள் காவல் துறையின் பஸ்ஸில் அழைத்து வரப்பட்டனர்.

    சிறை வளாகத்தில் அவர்கள் நிறுத்தப்பட்டிருந்தபோது ஒரு கைதி கீழே இறங்கி புகைப்பிடித்தார். இதை போலீஸார் தட்டிக் கேட்டதால் அவர்களை ஆங்கிலத்தில் சரமாரியாக அந்த கைதி திட்டினார். இதையடுத்து, 23 பேரும் பஸ்ஸýக்குள்ளேயே அமரவைக்கப்பட்டனர்.

    23 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட முதலாவது நீதித்துறை நடுவர் சி. கதிரவன் ஏப்ரல் 11-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதுபோல, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள 12 பேரும் மாலையில் விடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் ஏப்ரல் 11-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    இந்த வழக்குத் தொடர்பாக கைதான 35 பேரில் கப்பலின் கேப்டன் மற்றும் பாதுகாப்பு அதிகாரி தவிர மற்ற 33 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு கப்பல் நிர்வாகம் உத்தரவாதம் அளித்தால் ஓரிரு நாள்களில் 33 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்படுவர் என க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai